Thursday, March 30, 2017

இரவு

அது ஒரு சனிக்கிழமை. இரவு சரியாக 7 மணி இருக்கும். எங்கள் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் சிலர் வந்திருந்தார்கள். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. 9.30 மணி ஆகிவிட்டது. அவர்கள் மயிலாப்பூர் வரை செல்ல வேண்டும். என் மனைவி அவர்களை cab book செய்து அவர்கள் வீட்டில் சென்று விட்டு வரமுடியுமா என்று கேட்டாள். அந்த இரவு நேரத்தில் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். திரும்பி வரும் பொழுது cab book செய்து வந்துவிடுங்கள் என்று கூறினாள். சரி போய் வருவோம் என்று கிளம்பினேன். திடீரென்று ஒரு யோசனை, திரும்பி வரும்பொழுது பஸ் பிடித்து வரலாம் என்று எண்ணிக்கொண்டே கிளம்பினேன். சென்னையில் இரவு பேருந்து பயணம் செய்து வெகுநாட்கள் ஆகிவிட்டுருந்தது. சென்னையின் இரவு பேருந்து பயணம் எப்பொழுதும் மிக சுவாரசியமாக இருக்கும். மிக உற்சாகமாக கிளம்பினேன். cab சரியாக 9.50 மணிக்கு வந்து சேர்ந்தது. மிகவும் மரியாதையுடன் வணக்கம் கூறினார் ஓட்டுநர். ஒரு நல்ல ஓட்டுநர் மட்டும் அமைந்துவிட்டால் பயணம் மிகவும் உற்சாகமாகிவிடும். நண்பர்களுடன் ஒருமுறை சபரிமலைக்கு ஒரு van வாடகைக்கு எடுத்து சென்று வந்தோம். அருமையான ஓட்டுநர் ஒருவர் வந்திருந்தார். பயணம் செய்த களைப்பே தெரியாத வகையில், மிகவும் நேர்த்தியாக செலுத்தி கொண்டே வந்தார். போகும் வழியில் சிறந்த உணவகங்களாக பார்த்து நிறுத்தினார். அது ஒரு மறக்க முடியாத பயணமாக எங்களுக்கு அமைந்தது. ஆனால், எனக்கு சில பயணங்கள், சில ஓட்டுநர்களால் மோசமான அனுபவங்களாக அமைந்திருக்கின்றன.

Cab டிரைவர் GPS உதவியுடன் வண்டியை ஓட்டிகொண்டே இருந்தார். "அண்ணே, இங்க left எடுத்துக்கோங்க" என்று கூறினேன். "சரி சார், GPSல சொல்றது புரியுது சார்" என்று கூறினார். அதன்பிறகு நான் வழி ஏதும் கூறவில்லை. நந்தனம், மந்தைவெளி வழியாக மயிலாப்பூர் வந்தடைந்தார். அன்று பெருமாள் கோவிலில் சப்பரஉற்சவம். பெருமாள் மாட வீதிகளில் வந்துகொண்டிருந்தார். கொஞ்சம் டிராபிக் இருந்தது. சரியாக 10.10 மணிக்கு அவர்கள் வீடு சென்றடைந்தோம். அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். நடந்து மயிலாப்பூர் tank பஸ் ஸ்டாப் வந்தடைந்தேன். ஒரு சில பணக்காரர்கள் walking போய்க்கொண்டிருந்தார்கள். நான் எந்த பேருந்து வந்தாலும் ஏறிவிடுவது என்று தீர்மானித்திருந்தேன். ஒரு பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே வந்தார்கள். ஒருவர் பாடிக்கொண்டிருந்தார், ஒருவர் மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார், இருவர் ஜால்ரா வாசித்துக்கொண்டிருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. தங்கள் வேலையே மட்டும் செய்துகொண்டிருந்தார்கள். தங்களுக்கு பிடித்த வேலையே ரசித்து செய்வது ஒரு வரம். அது எல்லாருக்கும் அமைவதில்லை. சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்யும் கூட்டம் தான் அதிகம் இங்கே. அதுவும், EMIயில் வீடு அல்லது கார் வாங்கிருந்தால், நாம் ஒரு வகையில் அடிமை தான்.

10 நிமிடம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன். kulfi வண்டி 2-3 என்னை கடந்து சென்றிருந்தது. 4-5 ஆட்டோ ஓட்டுனர்கள் என்னிடம் வலுக்கட்டாயமாக நான் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். "இன்னா சார் நீ, இந்த நேரத்துல பஸ்ஸுக்கு wait பண்றே, வா சார் நீ" என்று உரிமையாக கூப்பிட்டார்கள். நான் சிரித்து கொண்டே, ஆட்டோக்கு காசு இல்லை என்று கூறிவிட்டேன். ஒரு வழியாக 1A பஸ் வந்து சேர்ந்தது. கூட்டம் அவ்வளவாக இல்லை. 10 பேர் இருந்தால் அதிகம். எங்கு இறங்கலாம் என்று யோசித்துக்கொண்டே ஏறினேன். அடையாறு Depot டிக்கெட் வாங்கி கொண்டேன். டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அதுவும் கடையை கழுவி கொண்டிருந்தார்கள். பேருந்தில் வந்தவர்கள் காலையில் வேலைக்கு சென்றவர்களாக இருந்திருக்க வேண்டும். களைப்புடன் இருந்தார்கள். எல்லாரும் FM கேட்டு கொண்டிருந்தார்கள். யாரும், யாரையும் பொருட்படுத்தவில்லை. அடுத்த நாளைக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள ஆயத்தமானார்கள். ஒரு வகையில் போருக்கு சென்று திரும்பி வந்த மனநிலையில் இருந்தார்கள். வெளியே ஒரு போலீஸ்காரர், ஒரு இரண்டு சக்கர ஓட்டுனரை ஊத சொல்லிகொண்டிருந்தார். அவர் ஊதாமல் ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் சில பயணிகள் இறங்கிவிட்டிருந்தார்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். அழகான கடற்கரை காற்று. சில்லென்று காதை உரசிக்கொண்டு சென்றது. பேருந்து அடையாறு Depot வந்தடைந்தது.

நான் சாலையை கடந்து, இந்த பக்கம் வந்தேன். 47 வந்தால் T.நகர் வந்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். மணி அதற்குள் 11 ஆகிவிட்டிருந்தது. பேருந்து வரவில்லை. மக்கள் சாலை ஓரங்களில் குடும்பத்தோடு அமர்ந்திருந்தார்கள். சிரித்து பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குழந்தைகள், ஏதோ ஒரு பழைய விளையாட்டு பொருளை வைத்து சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தது. அம்மா, சாப்பாட்டை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தார். படுப்பதற்காக தரைவிரிப்பை விரித்தார்கள். இன்றைய பொழுதை கழித்துவிட்ட ஒரு நிம்மதி, திருப்தி அவர்களிடம் தெரிந்தது. அந்த குழந்தை என்னை பார்த்து கை காட்டி சிரித்தது. நானும் சிரித்தேன். 

மெதுவாக நடந்து பஸ் ஸ்டாப் வந்தேன். வெகு நேரமாக 47 பேருந்து வரவில்லை. 11.20 ஆகி விட்டது. அடுத்து வரும் வண்டியில் ஏறிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். 23C காலியாக வந்தது. நான் மட்டுமே பேருந்தில் இருந்தேன். சைதாப்பேட்டை டிக்கெட் வாங்கி கொண்டேன். நான், டிரைவர் மற்றும் கண்டக்டர் மட்டுமே இருந்தோம். "சார் 47 பஸ் service இல்லையா" என்றேன். "அய்யே, 11.30 மணிக்கு பஸ் ஏறிட்டு, 47 இல்லையா, 57 இல்லையானு கேக்கற" என்று சிரித்தார். நானும் சிரித்தேன். பேருந்து சைதாப்பேட்டை வந்து சேர்ந்தது. இறங்கி கொண்டேன். அடுத்த T .Nagar பேருந்து வரும் என்ற நம்பிக்கை இல்லை. நடந்து சென்று விடலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். ஒரு ஆட்டோக்காரர் வந்து அருகில் நின்றார். "T. நகர் போகனும்" என்றேன். "60 கொடுங்க சார் போலாம்" என்றார். "40 ரூபாய்னா வாங்க, இல்லை நடந்தே போய்டுறேன்"  என்றேன். சரி வாங்க என்றார். பேசிக்கொண்டே வந்தார். "சார் ஒரு கொசுவத்தி வாங்கிக்கறேன், night எப்படியும் வண்டியில தான் தூங்கணும். வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போக முடியல. இப்படி வண்டி ஓட்டினாதான் பசங்கள நல்ல படிக்க வைக்க முடியுது சார்" என்றார். "சார் நீங்க IT கம்பெனில வேலை பாக்கறீங்களா, நல்ல வேலை சார்" என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்தார். "அண்ணே வண்டியை அப்படியே leftல நிறுத்துங்க, நான் இறங்கிக்கறேன்" என்றேன்.

அவரிடம் 60 ரூபாய் கொடுத்தேன். "Thanks சார்" என்றார். "பசங்கள நல்லா படிக்க சொல்லுங்க" என்றேன். "கண்டிப்பா சொல்றேன் சார்" என்று அடுத்த சவாரிக்கு சென்றுவிட்டார்.

----

Sunday, February 26, 2017

அனுபவம்

சென்னையை அடுத்த ஒரு புறநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமை. வெயில் இல்லாத முன்மதிய நேரம். மக்கள் மெதுவாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். அவசரம் இல்லாத தன்மை எங்கும் நிலவியது. பூ, வாழைப்பழம், ஆப்பிள் வியாபாரம் மட்டும் சற்று பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இளைஞர்கள் நாகரிக உடைகள் அணிந்து, காதில் headphone சொருகி எங்கோ வேகமாக சென்றுகொண்டிருந்தார்கள். நான் பேருந்து வரும்வரை இதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்திருந்த பேருந்து வந்து சேர்ந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இறங்கி சென்றுவிட்டனர். யாரும் வண்டியில் இல்லை. நான் யோசித்துக்கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தேன். 5 நிமிடம் வரை யாரும் வரவில்லை. நான் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கீழே நடைபாதையில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். இடையில் ஒரு துண்டு மட்டுமே கட்டிருந்தார். ஒரு துணிப்பை மட்டும் வைத்திருந்தார். அதற்குள் என்ன இருந்தது என்று சரியாக தெரியவில்லை. அடிக்கடி பைக்குள் கை விட்டு சோதித்துக்கொண்டே இருந்தார். அதற்குள் மக்கள் பேருந்தில் வர ஆரம்பித்துவிட்டார்கள். ஜன்னலோர சீட் எல்லாம் நிரம்பிவிட்டுருந்தது. அந்த வயதானவர் மெதுவாக எழுந்து நின்றார். கால்கள் தடுமாறியது. யாரையோ எதிர்பார்த்திருந்தார். அடிக்கடி எழுந்து பார்த்துக்கொண்டிருந்தார். முகத்தில் ஒரு கடுகடுப்பு நன்றாக தெரிந்தது.

சிறிது நேரம் கழித்து ஒரு வயதான பெண்மணி வந்து, அந்த பெரியவர் அருகில் அமர்ந்தார். அவருடைய மனைவியாக இருக்க வேண்டும். "ஏன் இவ்வளவு நேரம்" என்று பெரியவர் கோவித்துக்கொண்டார். அந்த பெண்மணி ஏதும் சொல்லாமல் ஒரு கவர் கொடுத்து விட்டு எழுந்து சென்று விட்டார். இவர் அந்த
கவர் ஐ மெதுவாக பிரித்தார். நான் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் ஓட்டுநர் பேருந்தை எடுத்துவிட கூடாதே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் கவர் பிரிப்பதை நிறுத்தி விட்டு ஏதோ யோசிக்க ஆரம்பித்து விட்டார். தன்னுடைய துணி பைக்குள் கை விட்டு ஒருமுறை பார்த்து கொண்டார். முகத்தில் ஒரு திருப்தி. திரும்ப கவர் பிரித்து உள்ளிருந்து ஒரு அழகான ஒரு சிறிய பாட்டிலை எடுத்தார். அது ஒரு whiskey பாட்டில். அதை அழகாக தடவி கொடுத்து திறக்க ஆரம்பித்தார். திறக்க முடியவில்லை. கீழே தட்டி பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. பற்களால் கடித்து ஒரு வழியாக திறந்து விட்டார். எதையோ சாதித்து விட்ட ஒரு பெருமிதம். அருகில் இருந்த பிளாஸ்டிக் டம்ளரில்  பாதியை ஊற்றினார். தன்னுடைய துணிப்பையில் கை விட்டு ஒரு வாட்டர் பாக்கெட் மற்றும் ஒரு முறுக்கை எடுத்து வெளியே வைத்தார். தண்ணீரை பிரித்து டம்ளரில் ஊற்றினார். 3-5 சொட்டுகள் எடுத்து தரையில் தெளித்தார். மேல ஒருமுறை பார்த்துக்கொண்டார். கடகடவென ஒரே மடக்கில் குடித்து விட்டார். முகத்தில் பல பாவங்களை காண்பித்தார். அநேகமாக பேருந்தில் இருந்த அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

மெதுவாக எழுந்து தடுமாறி நான் அமர்ந்திருந்த பேருந்தில் ஏறினார். ஓட்டுநர் அமரும் இடத்தில் இருந்து ஆரம்பித்தார். "அய்யா சாப்பிட்டு 2 நாள் ஆச்சு, தர்மம் போடுங்க, பச்சை தண்ணி கூட குடிக்கல" என்று வரிசையாக கேட்க ஆரம்பித்தார். யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அலட்சியமாக பார்த்தார்கள். என்னிடம் நெருங்கும் பொழுது நானும் வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தேன். யாரும் காசு கொடுக்கவில்லை. அவர் பேருந்திலிருந்து இறங்கி, அவர் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்தார். மீதம் இருந்த பாதி பாட்டில் சரக்கை அப்படியே ஒரே மடக்கில் குடித்தார். அவருக்கு எதிர் பக்கம் கை தட்டி அழைத்தார். ஒருவன் வேகமாக ஓடி வந்து ஒரு பிளாஸ்டிக் கவரை இவரிடம் கொடுத்து விட்டு சென்றான். உள்ளே கை விட்டு ஒரு அப்பளத்தை எடுத்தார். எங்கள் பக்கம் திரும்பி  ஜன்னரோலமாக அமர்ந்திருந்த எங்களை பார்த்து அலட்சியமாக சிரித்து அப்பளத்தை கடிக்க ஆரம்பித்தார். பேருந்து நகர ஆரம்பித்தது.

Sunday, January 8, 2017

புதிர்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மிக தாமதமாக கண்விழித்து, ஹால் சோபாவில் சோம்பலுடன் படுத்திருந்தேன். ஏதோ படபடப்பாகவே இருந்தேன். இந்த வீட்டிற்கு குடி வந்ததிலிருந்து இப்படி தான் இருக்கிறது. திடீரென உள்ளே ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். ஒருவேளை பூனையாக இருக்கும் என்று நினைத்தேன். தலைக்கு மேல் மணி அடிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்து விட்டேன். ஒரு வேளை கனவாக இருக்குமோ. ஆசுவாசப்படுத்தி கொண்டு படுத்தால், மீண்டும் மணி அடிக்கும் சத்தம். கண்டிப்பாக இது கனவில்லை. மெதுவாக கதவருகில் சென்று நின்று கொண்டிருந்தேன். கதவிற்கு அருகில் இருக்கும் கண்ணாடியின் திரைசீலையை விலக்கி பார்த்தேன். யாரும் இல்லை. யோசித்து கொண்டே திரும்பினால், மீண்டும் மணி அடிக்கும் சத்தம். இந்தமுறை, வெளியில் அவன் இரண்டு பெரிய பைகளுடன் நின்றிருந்தான். ஒரு நிமிடம் யோசித்து விட்டு கதவை திறந்தேன்.  

"என்னடா எப்படி இருக்கே, நான்தான்டா" என்று அறிமுகப்படுத்திகொண்டான். என்னுடைய பழைய நண்பன் தான். ஆனால் அவ்வளவு நெருக்கம் எல்லாம் இல்லை. பார்த்து பல வருடங்கள் வேறு ஆகிருந்தது. இன்று தான் இங்கு வந்து இறங்கிருக்கிறான் என்று யூகித்து கொண்டேன். கடைசியாக பல வருடங்கள் முன்பு அவனை கடுமையாக அவமான படுத்தியது மட்டுமே மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

"சொல்லுடா எப்படி இருக்கே, என்ன திடீர்னு" என்று கேட்டேன். 

"ஏன் உள்ளே கூப்பிட மாட்டியா" என்று பைகளை எடுத்து கொண்டு உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான். " என்னடா சந்தோஷமா  இருக்கே போல" என்று வீட்டை ஒரு நோட்டம் விட்டான். "எங்க குடும்பத்த அவமான படுத்திட்டு நீ போயிட்ட. நாங்க ரொம்ப உடைஞ்சி போய்ட்டோம். நேரம் வரும்போது பாத்துக்கலாம்னு விட்டுட்டோம்" என்று சிரித்து கொண்டே சொன்னான். நானும் அசௌகரியமாக சிரித்தேன்.

"உன் வீட்ல தான் தங்கலாம்னு இருக்கேன்டா. நிறைய வேலை இருக்கு இங்க" என்று சொன்னான்.

"இல்லடா அது வந்து" என்று இழுத்தேன். "யாருடா இது" என்று என் காதருகே வந்து கேட்டான்

"எங்கடா" என்று சுத்திமுத்தி பார்த்தேன். "என்ன விளையாடறியா, கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு நிக்குது, யாருனு கேக்கற" என்றான். "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு கூட யாரும் ஊருல பேசிக்கலையே" என்று சிரித்தான். 

நானும் சிரித்தேன். "நீங்க எல்லாம் கொடுத்து வெச்சவங்கடா. இங்க வரவங்க எல்லாம் அந்த பொண்ண பாத்துட்டு யாருனு கேக்கறாங்க, ஆனா நான் இன்னும் பாக்கவே இல்லை" என்றேன்.

குழப்பமாக என்னையே பார்த்தான். "ஆமாம், என்  வீட்டுக்கு வரவங்க சில பேரு கண்ணுக்கு மட்டும் அந்த பொண்ணு தெரியுது, ஆனா என் கண்ணுக்கு மட்டும் தெரியமாட்டேங்குது. வீட்டுக்கு வந்த புதுசுல எனக்கும் கூட கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு, அப்போஅப்போ சத்தம் வரும், மல்லிகை பூ வாசனை வரும், போகப்போக எனக்கும் சரினு அப்படியே பழகிடுச்சு" என்று டீபாய் மேல இருந்த மல்லிகை பூவை எடுத்து ஓரமாக வைத்தேன்.

நான் அமைதியாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் வெகுநேரமாக அமைதியாக அமர்ந்திருந்தான். கொஞ்சம் வேர்த்திருந்தான். "சரிடா, எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இங்க தான் இருக்கான், அவனை பார்த்துட்டு வரேன்" என்று இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான். 

"சரிடா" என்று அவன் போனபிறகு கதவை மூடிவிட்டு உள்ளே வந்தேன். 

"யாரு அவன்" என்று அவள் கோவமாக கேட்டாள்.

"என்னோட பழைய நண்பன் தான். பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. கதவு கண்ணாடி வழியா பார்த்தவுடனே என்ன பண்றதுனு தெரியல. அவன் வேற ரெண்டு பேக் கொண்டு வந்திருந்தான். எப்படியும் இங்க தங்கறமாதிரி பிளான் போட்டு வந்திருப்பான். நம்ம ஒண்ணா இருக்கறது தெரிஞ்சா, வீட்ல சொல்லி பெரிய பிரச்சனை ஆயிடும்" என்று சொன்னேன். "நல்ல வேலை, நீ இந்த ஐடியா சொன்னே. அவனுக்கு தெரியாம இந்த பூவை எடுத்து வைக்கறதுக்குள்ள, எப்பா" என்று சிரித்தேன். பயந்து போய்ட்டான் என்று இருவரும் சிரித்தோம்.

"ஆனா உன் friend பெரிய முட்டாளா இருப்பான் போல, சொன்னதை அப்படியே நம்பி போய்ட்டான்" என்று சிரித்தாள். இருவரும் வெகு நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம். மீண்டும் மணி அடிக்கும் சத்தம். பொதுவாக இந்த வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். யோசித்துக்கொண்டே கதவை திறந்தேன். அவன் தான் நின்றிருந்தான். "என்னடா" என்றேன்.

சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான். வாசல் கதவு திறந்தே இருந்தது. சோபாவில் உட்கார்ந்தான். "அவளை டீ கொண்டு வரச்சொல்லு" என்றான். "நான் எப்படிடா சொல்லுவேன், நான் தான் அவளை பார்த்ததே இல்லைனு சொன்னேன்ல" என்றேன்.

கடகடவென சிரித்தான். "உன் போன் நம்பர் வாங்கி, உன் அட்ரஸ் கண்டுபிடிக்கும் போதே, எனக்கு தெரியும்டா எல்லாம். சரி, நீ என்னதான் பண்றேனு பாக்கலாம்னு நெனச்சேன். ஆனா பேய் ட்ராமா எல்லாம் ரொம்ப ஓவர்" என்று சிரித்தான். எங்கள் இருவரையும் பார்த்து கண்அடித்தான்.

"நான் குளிச்சிட்டு வரேன்" என்று உள்ளே சென்றான். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. டீபாயின் மீது இருந்த எனது மொபைல் போன் சத்தம் செய்தது. வாட்ஸாப்ப் நோட்டிபிகேஷன். அது எங்கள் ஊர் நண்பர்கள் குரூப்.
ஓபன் செய்து பார்த்தேன்.  "இன்று அவனுக்கு பத்தாம் ஆண்டு நினைவு நாள்" என்று அவன் போட்டோவுடன் வந்திருந்தது. கால்கள் நடுங்க, உதடுகள் வெடித்து, நெஞ்சில் ஏதோ அடைப்பது போல இருந்தது. திரும்பி பார்த்தேன்.

வாசல் கதவு, ஜன்னல்கள் தானாக மூடிக்கொண்டது. டிவியில் 'என் கதை முடியும் நேரமிது' என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.










Sunday, September 4, 2016

ரயில் பயணம்......

நான் ஒரு அவசரமான வேலையாக என் கிராமத்திற்கு செல்ல வேண்டும். இன்று இரவு ரயில். எங்கள் கிராமத்திற்கு சரியான பேருந்து வசதி இல்லை. ரயிலில் சென்றால் சற்று சௌகரியமாக இருக்கும். ரயில் அதிகாலை 3 மணி அளவில் சென்றடையும். அங்கிருந்து 3 கிமீ நடந்து செல்ல வேண்டும். அங்கு தான் பிரச்சனையே. அது ஒரு ஆள் அரவமற்ற பகுதி. ரயில் நிலையத்திலிருந்து கிராமம் வரை எப்போதும் அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வழி நெடுக இரு பக்கமும் சுடுகாடு. எனக்கு பொதுவாக பேய் பயம் கிடையாது, இருந்தாலும் ஒரு அமானுஷ்யமாக இருப்பதால் நான் ரயில் நிலையத்தில் காலை 6 மணி வரை இருந்து விட்டு, மெதுவாக செல்வது வழக்கம். ஸ்டேஷன் மாஸ்டர் தவிர யாரும் இல்லாத ஒரு ரயில் நிலையம் அது. நான் எப்போதும் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு வெளியே அமர்ந்து கொள்வது வழக்கம். அவர் பச்சை கொடி காட்டிவிட்டு, அவரது அறைக்குள் சென்று தூங்கிவிடுவார்.  

ஆஃபிஸில் இருந்து அவசரமாக வீடு வந்து, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து பையில் வைத்து அவசரமாக ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். ரயிலில் ஏறி அமர்ந்தேன். ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது. எனக்கு side upper சீட். சைடு லோயரில் ஒருவர் முழுவதுமாக போர்த்தி கொண்டு அமர்ந்திருந்தார். AC குளிர் புதிது போல. ஏதோ அர்த்தமாக என்னை பார்த்து சிரித்தார். நானும் சிரித்து வைத்தேன். TTE டிக்கெட் செக் செய்து கொண்டே வந்தார். என் டிக்கெட்டில் கிறுக்கி விட்டு திரும்ப தந்தார். அவரது டிக்கெட்டை செக் செய்யவில்லை. ஒருவேளை முன்னமே செக் செய்திருப்பார் போல. 

"சார் எங்க போறீங்க" என்று அவர் கேட்டார். நான் எனது ஊர் பெயரை சொன்னேன்.

"காலையில சீக்கிரமே போய்டுமே ரயில், எப்படி போவீங்க சார்" என்று கேட்டார்.

"6 மணி வரை ஸ்டேஷன் ல இருப்பேன் சார். அப்பறமா போவேன்" என்றேன்.

"ஏன் சார், 3 மணிக்கு நடந்து போலாமே சார் நீங்க" என்றார்.

"இல்லை சார், தனியா போகணும். அது தான் வேண்டாம்னு பாத்தேன்" என்றேன்.

"என்ன சார் ? பேய் பயமா" என்று சிரித்தார். 

அந்த சிரிப்பு என் தன்மானத்தை தட்டி எழுப்பியது. "அட போங்க சார், பேய் னு ஒண்ணு  இந்த உலகத்துல கிடையாது சார். அதெல்லாம் சும்மா ஊரை ஏமாத்தற வேலை. ஏன் பேய் ராத்திரி தான் வருமா, பகல்ல வந்தா பேய்க்கு பயமா. என்னை பார்த்தா பேய்க்கே பேதி ஆகும்" என்று நக்கலா சிரித்து கொண்டே சொன்னேன்.

முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டார். "ஆசைகள் நிறைவேறாம செத்தவங்க பேயா அலைவாங்கனு நீங்க கேள்வி பட்டதில்லையா சார்" என்றார்.

"ஹா ஹா ஹா அப்படி பார்த்தா மனுஷனை விட பேய்ங்க தான் ஜாஸ்தியா இருக்கும். என்ன நீங்க பேய் ஆராய்ச்சியாளரா" என்று கேட்டேன்.

"என்ன இருந்தாலும் நீங்க அப்படி சொல்லிருக்க கூடாது சார்" என்றார்.

"சரி விடுங்க. ரொம்ப குளிருதா சார், போத்திகிட்டு இருக்கீங்க" என்றேன். மெய்யமாக சிரித்தார். 

"அது சரி, நீங்க எங்க போறீங்க சார்" என்றேன். என்னுடைய ஊர் பெயரை சொன்னார். 

"நீங்க எப்படி காலைல போவீங்க" என்று கேட்டேன். 

"அது தான் நீங்க இருக்கீங்கல. 3 மணிக்கு பேசிக்கிட்டே நடந்து போயிடலாம்" என்றார்.

"சூப்பர் சார். எனக்கு தூக்கம் வருது. நான் மேல போய் படுத்துகிறேன்" என்றேன்.

"Good Night" என்று அழுத்தமாக கூறினார்.

அதிகாலை 3 மணிக்கு சரியாக ரயில் நிலையத்தை சென்றடைந்தது. நல்ல இருட்டு ரயில் நிலையத்தில். "வாங்க சார் நடந்து போய்டலாம்" என்றேன். 

"என்ன இருந்தாலும் நீங்க அப்படி சொல்லிருக்க கூடாது" என்றார். "அட விடுங்க சார், உண்மை சில நேரம் கசக்க தான் செய்யும்" என்றேன்.

பௌர்ணமி இரவு.மார்கழி மாத குளிர் வேறு. நான் பேசிக்கொண்டே வந்தேன். அவர் ஹ்ம்ம் கொட்டி கொண்டே வந்தார். இரண்டு பக்கமும் வறண்ட நிலத்தை மட்டுமே கொண்ட பாதை அது. அவர் மனம் புண்படும் படி அப்படி சொன்னதை நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டே அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன். அவர் ஹ்ம்ம் மட்டும் கொட்டி கொண்டே வந்தார். 

தீடீரென்று ஹ்ம்ம் கொட்டும் சத்தம் வரவில்லை. திரும்பி பார்த்தால், நிலா வெளிச்சத்தில் கண்ணுக்கு எட்டிய வரை யாரும் இல்லை. அவர் வந்ததற்கான அடையாளமே இல்லை. மார்கழி குளிரயிலும் என்னுடைய நெற்றியில் வியர்வை திட்டுக்கள். அதிகபட்ச இதய துடிப்பு. என்னுடைய கால்களுக்கு கீழே பூமி விலகுவது போல ஒரு எண்ணம். தலை சுற்றி வாந்தி வருவது போல உணர்ந்தேன். 

அவர் போர்த்தி கொண்டு அமர்ந்தது, TTE அவரிடம் டிக்கெட் கேட்காமல் சென்றது, அவருடைய கோபம் எல்லாம் மனதிற்குள் வந்து சென்றது. 

சட்டென்று ஒரு புதர் அருகிலிருந்து அவர் வந்தார். "சார் கொஞ்சம் அவசரம், அது தான் சொல்லாம போய்ட்டேன். என்ன சார் பேய் அடிச்சமாதிரி இருக்கீங்க, நான் திடீர்னு இல்லைனதும் பயந்துடீங்க போல. ஹா ஹா ஹா" என்று சிரித்தார்.

எனக்கு நல்ல கோபம். "ஹலோ நான் திரும்ப திரும்ப சொல்றேன், பேய்னு ஒண்ணே கிடையாது. பேசாம வாங்க" என்றேன்.

அவர் என் அருகில் வந்தார். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.தன்னுடைய கையை என் தோள் மீது போட்டார். இவ்வளவு பாரத்தை நான் இது வரை சுமந்ததே இல்லை. என்னால் மூச்சு விட முடியாத அளவிற்கு பாரம் அவரது கைகள்.

அவர் இன்னும் பாரத்தை அழுத்தி கொண்டே சொன்னார், "நீங்க அப்படி சொல்லிருக்க கூடாது சார்".

நான் பூமிக்குள் மெதுவாக புதைய ஆரம்பித்தேன்.............



Wednesday, July 27, 2016

அவளும் நானும்...

அன்று ஆபிஸ் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். வெகுநேரமாக பேருந்து வரவில்லை. பஸ் ஸ்டாப்பிலும் கூட்டம் அவ்வளவாக இல்லை. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. நனையும் அளவிற்கு தூறல் இல்லை. ஆனாலும் நனைந்தபடி நின்றிருந்தேன்.

தூரத்தில் பேருந்து  வருவது தெரியவே தயாரானேன். மூச்சிரைக்க வந்த பஸ், ஸ்டாப்பில் நின்றது. உட்கார  இடம் இருக்குமா என்ற பதட்டம் வேறு. டிராபிக் நேரத்தில் ஒண்ணரை மணி நேரம் நின்று கொண்டு வீடு வருவது கொடுமை. ஏறியவுடன் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றேன். கிட்டத்தட்ட பஸ் நிறைந்திருந்தது. நொந்து கொண்டேன். ஒரு சீட் காலியாக இருந்தது. அது எதிர் எதிராக அமரும் சீட். அதில் அமர்ந்து கொண்டேன். எதிரில் ஒரு  இளைஞி. அநேகமாக IT கம்பெனியில் வேலை பார்ப்பவள் போல தான் தெரிந்தாள். அழகாவும் இருந்தாள்.

முதல் ஐந்து நிமிடம் வெளியில் மழை தூறல்களை வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தேன். அவளை நேருக்கு நேர் பார்க்கலாமா என்ற ஒரு சிறு குறுகுறுப்பு வேறு என்னை  படுத்திக்கொண்டிருந்தது . படு அலட்சியமாக திரும்புவது போல அவளை பார்த்தேன். மின்னல் போல சட்டென்று என்னை பார்த்து கொண்டிருந்த பார்வையை விலக்கினாள். இது வரை என்னை பார்த்துக்கொண்டிருந்தாள் என்ற எண்ணமே மின்சாரம் பாய்ச்சிய ஒரு நடுக்கத்தை தந்தது. முழுதும் மூடியிருந்தும் கண்ணாடியின் வழியாக தூறல் முகத்தில் தெளிப்பது போல ஒரு சிலிர்ப்பு.

நான் அவளை ரகசியமாக பார்ப்பது தெரிந்து, வெளியில் பார்ப்பது போல பாவனை செய்து கொண்டாள். சினேகமாக சிரிக்கலாமா என்று ஒரு யோசனை. சரி வேண்டாம். ஏசி காற்று பட்டு காதோரத்தில் அவள் கூந்தல் பறந்தது ஒரு கவிதை. நான் பார்த்தது  கண்டு சரி செய்து கொண்டாள். முறைப்பது போல ஒரு முகபாவம். ஆனாலும் ஏசி காற்று படும்படியாகவே அமர்ந்துகொண்டாள். கூந்தல் அழகாக பறந்துகொண்டு தான் இருந்தது.

பேருந்தில் ஒரு சில பெண்கள் ஏறினார்கள். எழுந்து இடம் கொடுக்க வேண்டுமா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். எழுவது போல லேசாக பாவனை செய்தேன். வேண்டாம் என்பது போல அவள் கண்களில் ஒரு கெஞ்சல். இல்லையில்லை மிரட்டல். மனப்பிரம்மையா. கண்டிப்பாக இருக்காது. போனில் யாரிடமோ பேசுவது போல பார்த்துக்கொண்டிருந்தேன். போனில் எனக்கு பெண் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிகொண்டிருந்தேன். களுக் என்று ஒரு சிரிப்பு. உதட்டுக்கு வெளியே வராத ஒரு புன்சிரிப்பு. எனக்கு இதயத்தில் அமிலம் ஓடிய ஒரு வெப்பம். இந்த பயணம் நீண்டு கொண்டேஇருக்காதா என்ற ஒரு ஏக்கம். என் அசைவுகளை,எண்ணங்களை ரசிக்கிறாள் என்ற எண்ணமே சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அவள் எழுந்து இறங்குவதற்கு தயாரானாள். என்னை மெதுவாக கடந்து நடந்து சென்றாள். அவள் கால் என்மீது  படவில்லை என்று அறிந்தும், பட்டதாக நினைத்து சாரி சொன்னாள். அந்த சாரி என் காதில் பலமுறை எதிரொலித்து கொண்டிருந்தது. பேருந்து நின்றது. இறங்கிவிட்டாள்.  பேருந்து மெதுவாக அவளை கடந்து சென்றது. அவள் பார்க்கவில்லை. கணமான ஒரு மௌனம். எதிர்பார்த்தலில் ஒரு ஏமாற்றம். மெதுவாக சென்ற பேருந்து சிக்னலில் நின்றது. கண்ணாடியில் தலை சாய்த்து அமர்ந்திருந்தேன். அனிச்சையாக வெளியே பார்த்தேன். பேருந்தை கடந்து நடந்து கொண்டிருந்தாள். பேருந்து கிளம்பியது. அவளை கடந்த அந்த தருணம் சலனமின்றி அமர்ந்திருந்தேன். மெதுவாக என்னை பார்த்து தலை சாய்த்து சிரித்தாள் :) :) :)


Wednesday, June 22, 2016

மனசாட்சி

நான் நடந்து கொண்டே இருந்தேன். அவனும் கூடவே வந்தான். அவனிடம் எதுவும் பேசவில்லை. பேசுவதாலும் ஒன்றும் ஆகிவிடபோவதில்லை என்று நான் நன்றாக அறிந்திருந்தேன்.  அது ஒரு மிகப்பெரிய வனம். பொட்டு வெயில் பூமியில் விழாதவாறு அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள். தங்கள் கடமை நிற்பதே என்பது போல நின்றிருந்தன. இந்த பூமியை தாங்கள் தான் இயக்குகிறோம் என்ற உண்மை தெரிந்தும் மௌனமாய் நிற்கின்றன. இயற்கையின் வனப்பை வியந்து சந்தோஷித்திருந்தேன். அவன் திடீரென்று மறைந்துவிட்டான். நான் சந்தோசமாக இருக்கும் பொழுது அவன் என்னிடம் இருப்பதில்லை. நான் அவனை தேடபோவதில்லை. என்னை விட்டு நீங்கினால் போதும் என்ற மனநிலையை எட்டி விட்டேன். அவனிடம் எனக்கு எப்பொழுதும் ஒரு சலிப்பு உண்டு. என்னை வழிநடத்துகிறேன் என்ற ஒரு மனநிலையில் என்னையே கண்காணித்து கொண்டிருக்கிறான்.  

ஒரு இறகை சுமந்துகொண்டு நடப்பது போல இருந்தால், நான் உண்மையில் மகிழ்ச்சியுடன் நடந்திருப்பேன். ஆனால் அவன் ஒரு பெரிய பாறாங்கல் போல் அல்லவா இருக்கிறான். அவனை சுமந்து கொண்டு நடப்பது ஒரு பெரிய அழுத்தமாக இருக்கிறது. சுவாசக்குழாயை அடைப்பது போல ஒரு உணர்வு.என்னை எப்பொழுதும் பின்னோக்கி இழுப்பது போல ஒரு எண்ணம். தடம் மாறுவதால் உண்டாகும் இழப்புகளை மட்டுமே என்னை சிந்திக்க வைக்கும் ஒரு மனோபாவம். இவனுடன் வாழ்ந்திட முடியுமா என்ற மாயகொக்கியை என்றென்றும் என் முதுகில் குத்தியிருப்பதை போல ஒரு உணர்ச்சி.

இவன் என்னுடன் மட்டும் தானா இருக்கிறான். நான் தனியாக நடக்கையிலும், வேதாளம் போல உப்புமூட்டையாக இருக்கிறான். உண்மையில் அவன் நம் அனைவரின் முதுகிலும் ஏறி அமர்ந்திருக்கிறான் என்கிற வரையில் எனக்கு ஒரு மெல்லிய ஆசுவாசம். ஜீவாத்மா, பரமாத்வா போல கண்ணுக்கு தெரியாமல் அடிநெஞ்சில் அழுத்திகொண்டிருக்கிறான். புவிஈர்ப்பு இல்லாத ஒரு இடம் பூமியில் இல்லாது போல , இவன் இல்லாமலும் நான் இருந்ததில்லை. மனம் அலைபாயும் பொழுதெல்லாம், அம்மா திட்ட தயங்கியபொழுதெல்லாம், அப்பா கண்டிக்க மறந்தபோதெல்லாம் இவன் தன்னுடைய கடமையை விட்டு விலகியதில்லை. இல்லாத கைகளால் என்னை அறைந்திருக்கிறான், சொல்லாத வார்த்தையால் என்னை துளைத்திருக்கிறான், வெட்கப்பட வைத்திருக்கிறான்.

எனக்கு ஏன் இவன் மேல் இவ்வளவு கோபம். என்னுடைய சந்தோசத்தை தடுப்பதாலா? என் மனம் போன போக்கில் போக அனுமதிக்காததாலா? ஒருவேளை சமுதாயத்தின் நியதிகளுக்கு உட்பட்டு என்னை நடத்துவதாலா? இருக்கலாம். இவன் என்னுடன் இருப்பதால் மட்டுமே நான் இன்றளவில் உயிர்ப்புடன் இருக்கிறேன். சமுதாயம், சட்டம், சுயஒழுக்கம், பரிவு, கருணை போன்றவற்றின் ஆதிக்கங்களை இவனிடம் கொடுத்துவிட்டதாலோ என்னவோ, செல்லும் பாதையில் ஒரு நிம்மதியை இவன் பரிசாக திரும்ப தருகிறான்.

இன்று அடர்ந்த காட்டில், இயற்க்கையின் ஆதிக்கத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். இவன் என்னிடம் இல்லை இப்பொழுது. தெரியும். தவறேதும் செய்யாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும்பொழுது இவன் ஒளிந்திருந்து பார்த்து மகிழ்கிறான்.

மனசாட்சி :) :)

Thursday, June 2, 2016

திரைப்படம் - ரசனை

எனக்கு பொதுவாகவே திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். நிறைய படங்கள் பார்க்க நிறைய பிடிக்கும். திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கபடுபவை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பொழுதுபோக்கு அதில் ஒரு அம்சம். அவ்வளவே. அந்த எல்லையையும் தாண்டி பல படிப்பினைகள் அதில் உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி திரைப்படம் பார்ப்பது ஒரு ரசனை சார்ந்த விஷயம்.

சில படங்கள் திரைக்கு வருவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பிரிந்தே, அந்த படம் சார்ந்த ஒரு உற்சாகம் நம்மிடயே தொற்றிகொள்வது உண்டு. அந்த படம் பற்றியே தெரிந்திராத நாம், அதைபற்றிய பல திட்டமிடலும், யூகங்களுடனும் நாட்களை கடத்த ஆரம்பித்துவிடுவோம். இது ஒரு உற்சாகமான மனநிலை. சமுதாயத்தில்,  தொழிலில், குடும்பத்தில் உள்ள பல அழுத்தத்திற்கு இடையையும் நம்மை நகர்த்தி கொண்டு போவது இதுபோன்ற சில காரணிகளேயன்றி வேறொன்றுமில்லை. திரைப்படங்கள் ஒருவிதமான உந்துசக்தி என்பது என்னுடைய புரிதல்.

திரைப்படம் ஆக்குதல் ஒரு கலையென்றால், அதை ரசிப்பது அதைவிட பெரிய கலையாக இருக்கவேண்டும். திரைத்துறை என்ற ஒரு பிரம்மாண்டமான கட்டமைப்பிற்கு, வியாபாரத்திற்கு நம்முடைய ரசனை அடித்தளமாக இருக்கிறது. நாம் பார்க்கும், ரசிக்கும் படங்கள் ஒருவாறாக நம்மை அடையாளபடுத்தி விடுகிறது. 

திரைஅரங்கில் படங்கள் பார்ப்பது மட்டுமே நிறைவான  பார்த்தல் அனுபவத்தை தருகிறது என்பது என் அனுமானம். நான் பொதுவாகவே படம் ஆரம்பிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே எனது இருக்கையில் சங்கமித்துவிடுவேன். ஒருவிதமாக திரைபடத்தை ரசிப்பதற்கு என்னை தயார்படுத்தும் மனநிலை இது. படம் ஆரம்பித்த பின்னும் சிலர் அரங்கிற்குள் வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சிலர் பதட்டத்தோடும், சிலர் அலட்சியதோடும் நுழைவார்கள். இவர்கள் ரயில் நிலையத்திற்கோ, விமானத்திற்கோ இப்படி செல்வதை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். திரைப்படம் தானே என்ற அலட்சியம் மட்டுமே காரணம். Tarantino, Nolan  போன்றவர்களின் படங்களிற்கு 45 நிமிடங்களுக்கு பிறகு வருவது எந்தமாதிரியான ஒரு ரசனை என்று எனக்கு புரியவில்லை. வந்தபிறகும் pop cornகு என்ன flavour சேர்த்து வாங்க வேண்டும், lunch எங்கே சாப்பிடுவது போன்ற முடிவுகளை மிகசத்தமாக எடுக்கிறார்கள். பலர் செல்பேசியில் பேசுவதற்காகவே வருகிறார்கள் போல. இதற்கு ரசனை வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, குறைந்தபட்சம் ஒரு சுயஒழுக்கம் மட்டுமே போதுமானது. படத்தை கைதட்டி, விசிலடித்து பார்ப்பதும் ரசனையின் ஒரு வெளிப்பாடே. அதில் தவறில்லை. அது அனைவரையும் ரசனையின் ஒரு மைய புள்ளியில் நம்மை இருத்திவிடுகிறது.

பலருக்கு இது பொழுதுபோக்கு மட்டுமே, மிகச்சிலருக்கு இது உணர்வு சார்ந்த/வாழ்க்கை சார்ந்த விஷயம். படங்களை ரசிப்போம், ரசிக்க செய்வோம். 

நன்றி.