அது ஒரு சனிக்கிழமை. இரவு சரியாக 7 மணி இருக்கும். எங்கள் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் சிலர் வந்திருந்தார்கள். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. 9.30 மணி ஆகிவிட்டது. அவர்கள் மயிலாப்பூர் வரை செல்ல வேண்டும். என் மனைவி அவர்களை cab book செய்து அவர்கள் வீட்டில் சென்று விட்டு வரமுடியுமா என்று கேட்டாள். அந்த இரவு நேரத்தில் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். திரும்பி வரும் பொழுது cab book செய்து வந்துவிடுங்கள் என்று கூறினாள். சரி போய் வருவோம் என்று கிளம்பினேன். திடீரென்று ஒரு யோசனை, திரும்பி வரும்பொழுது பஸ் பிடித்து வரலாம் என்று எண்ணிக்கொண்டே கிளம்பினேன். சென்னையில் இரவு பேருந்து பயணம் செய்து வெகுநாட்கள் ஆகிவிட்டுருந்தது. சென்னையின் இரவு பேருந்து பயணம் எப்பொழுதும் மிக சுவாரசியமாக இருக்கும். மிக உற்சாகமாக கிளம்பினேன். cab சரியாக 9.50 மணிக்கு வந்து சேர்ந்தது. மிகவும் மரியாதையுடன் வணக்கம் கூறினார் ஓட்டுநர். ஒரு நல்ல ஓட்டுநர் மட்டும் அமைந்துவிட்டால் பயணம் மிகவும் உற்சாகமாகிவிடும். நண்பர்களுடன் ஒருமுறை சபரிமலைக்கு ஒரு van வாடகைக்கு எடுத்து சென்று வந்தோம். அருமையான ஓட்டுநர் ஒருவர் வந்திருந்தார். பயணம் செய்த களைப்பே தெரியாத வகையில், மிகவும் நேர்த்தியாக செலுத்தி கொண்டே வந்தார். போகும் வழியில் சிறந்த உணவகங்களாக பார்த்து நிறுத்தினார். அது ஒரு மறக்க முடியாத பயணமாக எங்களுக்கு அமைந்தது. ஆனால், எனக்கு சில பயணங்கள், சில ஓட்டுநர்களால் மோசமான அனுபவங்களாக அமைந்திருக்கின்றன.
Cab டிரைவர் GPS உதவியுடன் வண்டியை ஓட்டிகொண்டே இருந்தார். "அண்ணே, இங்க left எடுத்துக்கோங்க" என்று கூறினேன். "சரி சார், GPSல சொல்றது புரியுது சார்" என்று கூறினார். அதன்பிறகு நான் வழி ஏதும் கூறவில்லை. நந்தனம், மந்தைவெளி வழியாக மயிலாப்பூர் வந்தடைந்தார். அன்று பெருமாள் கோவிலில் சப்பரஉற்சவம். பெருமாள் மாட வீதிகளில் வந்துகொண்டிருந்தார். கொஞ்சம் டிராபிக் இருந்தது. சரியாக 10.10 மணிக்கு அவர்கள் வீடு சென்றடைந்தோம். அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். நடந்து மயிலாப்பூர் tank பஸ் ஸ்டாப் வந்தடைந்தேன். ஒரு சில பணக்காரர்கள் walking போய்க்கொண்டிருந்தார்கள். நான் எந்த பேருந்து வந்தாலும் ஏறிவிடுவது என்று தீர்மானித்திருந்தேன். ஒரு பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே வந்தார்கள். ஒருவர் பாடிக்கொண்டிருந்தார், ஒருவர் மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார், இருவர் ஜால்ரா வாசித்துக்கொண்டிருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. தங்கள் வேலையே மட்டும் செய்துகொண்டிருந்தார்கள். தங்களுக்கு பிடித்த வேலையே ரசித்து செய்வது ஒரு வரம். அது எல்லாருக்கும் அமைவதில்லை. சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்யும் கூட்டம் தான் அதிகம் இங்கே. அதுவும், EMIயில் வீடு அல்லது கார் வாங்கிருந்தால், நாம் ஒரு வகையில் அடிமை தான்.
10 நிமிடம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன். kulfi வண்டி 2-3 என்னை கடந்து சென்றிருந்தது. 4-5 ஆட்டோ ஓட்டுனர்கள் என்னிடம் வலுக்கட்டாயமாக நான் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். "இன்னா சார் நீ, இந்த நேரத்துல பஸ்ஸுக்கு wait பண்றே, வா சார் நீ" என்று உரிமையாக கூப்பிட்டார்கள். நான் சிரித்து கொண்டே, ஆட்டோக்கு காசு இல்லை என்று கூறிவிட்டேன். ஒரு வழியாக 1A பஸ் வந்து சேர்ந்தது. கூட்டம் அவ்வளவாக இல்லை. 10 பேர் இருந்தால் அதிகம். எங்கு இறங்கலாம் என்று யோசித்துக்கொண்டே ஏறினேன். அடையாறு Depot டிக்கெட் வாங்கி கொண்டேன். டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அதுவும் கடையை கழுவி கொண்டிருந்தார்கள். பேருந்தில் வந்தவர்கள் காலையில் வேலைக்கு சென்றவர்களாக இருந்திருக்க வேண்டும். களைப்புடன் இருந்தார்கள். எல்லாரும் FM கேட்டு கொண்டிருந்தார்கள். யாரும், யாரையும் பொருட்படுத்தவில்லை. அடுத்த நாளைக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள ஆயத்தமானார்கள். ஒரு வகையில் போருக்கு சென்று திரும்பி வந்த மனநிலையில் இருந்தார்கள். வெளியே ஒரு போலீஸ்காரர், ஒரு இரண்டு சக்கர ஓட்டுனரை ஊத சொல்லிகொண்டிருந்தார். அவர் ஊதாமல் ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் சில பயணிகள் இறங்கிவிட்டிருந்தார்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். அழகான கடற்கரை காற்று. சில்லென்று காதை உரசிக்கொண்டு சென்றது. பேருந்து அடையாறு Depot வந்தடைந்தது.
நான் சாலையை கடந்து, இந்த பக்கம் வந்தேன். 47 வந்தால் T.நகர் வந்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். மணி அதற்குள் 11 ஆகிவிட்டிருந்தது. பேருந்து வரவில்லை. மக்கள் சாலை ஓரங்களில் குடும்பத்தோடு அமர்ந்திருந்தார்கள். சிரித்து பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குழந்தைகள், ஏதோ ஒரு பழைய விளையாட்டு பொருளை வைத்து சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தது. அம்மா, சாப்பாட்டை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தார். படுப்பதற்காக தரைவிரிப்பை விரித்தார்கள். இன்றைய பொழுதை கழித்துவிட்ட ஒரு நிம்மதி, திருப்தி அவர்களிடம் தெரிந்தது. அந்த குழந்தை என்னை பார்த்து கை காட்டி சிரித்தது. நானும் சிரித்தேன்.
மெதுவாக நடந்து பஸ் ஸ்டாப் வந்தேன். வெகு நேரமாக 47 பேருந்து வரவில்லை. 11.20 ஆகி விட்டது. அடுத்து வரும் வண்டியில் ஏறிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். 23C காலியாக வந்தது. நான் மட்டுமே பேருந்தில் இருந்தேன். சைதாப்பேட்டை டிக்கெட் வாங்கி கொண்டேன். நான், டிரைவர் மற்றும் கண்டக்டர் மட்டுமே இருந்தோம். "சார் 47 பஸ் service இல்லையா" என்றேன். "அய்யே, 11.30 மணிக்கு பஸ் ஏறிட்டு, 47 இல்லையா, 57 இல்லையானு கேக்கற" என்று சிரித்தார். நானும் சிரித்தேன். பேருந்து சைதாப்பேட்டை வந்து சேர்ந்தது. இறங்கி கொண்டேன். அடுத்த T .Nagar பேருந்து வரும் என்ற நம்பிக்கை இல்லை. நடந்து சென்று விடலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். ஒரு ஆட்டோக்காரர் வந்து அருகில் நின்றார். "T. நகர் போகனும்" என்றேன். "60 கொடுங்க சார் போலாம்" என்றார். "40 ரூபாய்னா வாங்க, இல்லை நடந்தே போய்டுறேன்" என்றேன். சரி வாங்க என்றார். பேசிக்கொண்டே வந்தார். "சார் ஒரு கொசுவத்தி வாங்கிக்கறேன், night எப்படியும் வண்டியில தான் தூங்கணும். வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போக முடியல. இப்படி வண்டி ஓட்டினாதான் பசங்கள நல்ல படிக்க வைக்க முடியுது சார்" என்றார். "சார் நீங்க IT கம்பெனில வேலை பாக்கறீங்களா, நல்ல வேலை சார்" என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்தார். "அண்ணே வண்டியை அப்படியே leftல நிறுத்துங்க, நான் இறங்கிக்கறேன்" என்றேன்.
அவரிடம் 60 ரூபாய் கொடுத்தேன். "Thanks சார்" என்றார். "பசங்கள நல்லா படிக்க சொல்லுங்க" என்றேன். "கண்டிப்பா சொல்றேன் சார்" என்று அடுத்த சவாரிக்கு சென்றுவிட்டார்.
----
Very well written 👍🏽 Made readers to feel like travel with the blogger. Both concept and the way it was presented are too good.
ReplyDeleteChennai has many colours and venturing it during night paints a different picture. That crux was captured well in this blog!
Thanks for sharing 😊