Sunday, September 4, 2016

ரயில் பயணம்......

நான் ஒரு அவசரமான வேலையாக என் கிராமத்திற்கு செல்ல வேண்டும். இன்று இரவு ரயில். எங்கள் கிராமத்திற்கு சரியான பேருந்து வசதி இல்லை. ரயிலில் சென்றால் சற்று சௌகரியமாக இருக்கும். ரயில் அதிகாலை 3 மணி அளவில் சென்றடையும். அங்கிருந்து 3 கிமீ நடந்து செல்ல வேண்டும். அங்கு தான் பிரச்சனையே. அது ஒரு ஆள் அரவமற்ற பகுதி. ரயில் நிலையத்திலிருந்து கிராமம் வரை எப்போதும் அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வழி நெடுக இரு பக்கமும் சுடுகாடு. எனக்கு பொதுவாக பேய் பயம் கிடையாது, இருந்தாலும் ஒரு அமானுஷ்யமாக இருப்பதால் நான் ரயில் நிலையத்தில் காலை 6 மணி வரை இருந்து விட்டு, மெதுவாக செல்வது வழக்கம். ஸ்டேஷன் மாஸ்டர் தவிர யாரும் இல்லாத ஒரு ரயில் நிலையம் அது. நான் எப்போதும் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு வெளியே அமர்ந்து கொள்வது வழக்கம். அவர் பச்சை கொடி காட்டிவிட்டு, அவரது அறைக்குள் சென்று தூங்கிவிடுவார்.  

ஆஃபிஸில் இருந்து அவசரமாக வீடு வந்து, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து பையில் வைத்து அவசரமாக ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். ரயிலில் ஏறி அமர்ந்தேன். ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது. எனக்கு side upper சீட். சைடு லோயரில் ஒருவர் முழுவதுமாக போர்த்தி கொண்டு அமர்ந்திருந்தார். AC குளிர் புதிது போல. ஏதோ அர்த்தமாக என்னை பார்த்து சிரித்தார். நானும் சிரித்து வைத்தேன். TTE டிக்கெட் செக் செய்து கொண்டே வந்தார். என் டிக்கெட்டில் கிறுக்கி விட்டு திரும்ப தந்தார். அவரது டிக்கெட்டை செக் செய்யவில்லை. ஒருவேளை முன்னமே செக் செய்திருப்பார் போல. 

"சார் எங்க போறீங்க" என்று அவர் கேட்டார். நான் எனது ஊர் பெயரை சொன்னேன்.

"காலையில சீக்கிரமே போய்டுமே ரயில், எப்படி போவீங்க சார்" என்று கேட்டார்.

"6 மணி வரை ஸ்டேஷன் ல இருப்பேன் சார். அப்பறமா போவேன்" என்றேன்.

"ஏன் சார், 3 மணிக்கு நடந்து போலாமே சார் நீங்க" என்றார்.

"இல்லை சார், தனியா போகணும். அது தான் வேண்டாம்னு பாத்தேன்" என்றேன்.

"என்ன சார் ? பேய் பயமா" என்று சிரித்தார். 

அந்த சிரிப்பு என் தன்மானத்தை தட்டி எழுப்பியது. "அட போங்க சார், பேய் னு ஒண்ணு  இந்த உலகத்துல கிடையாது சார். அதெல்லாம் சும்மா ஊரை ஏமாத்தற வேலை. ஏன் பேய் ராத்திரி தான் வருமா, பகல்ல வந்தா பேய்க்கு பயமா. என்னை பார்த்தா பேய்க்கே பேதி ஆகும்" என்று நக்கலா சிரித்து கொண்டே சொன்னேன்.

முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டார். "ஆசைகள் நிறைவேறாம செத்தவங்க பேயா அலைவாங்கனு நீங்க கேள்வி பட்டதில்லையா சார்" என்றார்.

"ஹா ஹா ஹா அப்படி பார்த்தா மனுஷனை விட பேய்ங்க தான் ஜாஸ்தியா இருக்கும். என்ன நீங்க பேய் ஆராய்ச்சியாளரா" என்று கேட்டேன்.

"என்ன இருந்தாலும் நீங்க அப்படி சொல்லிருக்க கூடாது சார்" என்றார்.

"சரி விடுங்க. ரொம்ப குளிருதா சார், போத்திகிட்டு இருக்கீங்க" என்றேன். மெய்யமாக சிரித்தார். 

"அது சரி, நீங்க எங்க போறீங்க சார்" என்றேன். என்னுடைய ஊர் பெயரை சொன்னார். 

"நீங்க எப்படி காலைல போவீங்க" என்று கேட்டேன். 

"அது தான் நீங்க இருக்கீங்கல. 3 மணிக்கு பேசிக்கிட்டே நடந்து போயிடலாம்" என்றார்.

"சூப்பர் சார். எனக்கு தூக்கம் வருது. நான் மேல போய் படுத்துகிறேன்" என்றேன்.

"Good Night" என்று அழுத்தமாக கூறினார்.

அதிகாலை 3 மணிக்கு சரியாக ரயில் நிலையத்தை சென்றடைந்தது. நல்ல இருட்டு ரயில் நிலையத்தில். "வாங்க சார் நடந்து போய்டலாம்" என்றேன். 

"என்ன இருந்தாலும் நீங்க அப்படி சொல்லிருக்க கூடாது" என்றார். "அட விடுங்க சார், உண்மை சில நேரம் கசக்க தான் செய்யும்" என்றேன்.

பௌர்ணமி இரவு.மார்கழி மாத குளிர் வேறு. நான் பேசிக்கொண்டே வந்தேன். அவர் ஹ்ம்ம் கொட்டி கொண்டே வந்தார். இரண்டு பக்கமும் வறண்ட நிலத்தை மட்டுமே கொண்ட பாதை அது. அவர் மனம் புண்படும் படி அப்படி சொன்னதை நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டே அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன். அவர் ஹ்ம்ம் மட்டும் கொட்டி கொண்டே வந்தார். 

தீடீரென்று ஹ்ம்ம் கொட்டும் சத்தம் வரவில்லை. திரும்பி பார்த்தால், நிலா வெளிச்சத்தில் கண்ணுக்கு எட்டிய வரை யாரும் இல்லை. அவர் வந்ததற்கான அடையாளமே இல்லை. மார்கழி குளிரயிலும் என்னுடைய நெற்றியில் வியர்வை திட்டுக்கள். அதிகபட்ச இதய துடிப்பு. என்னுடைய கால்களுக்கு கீழே பூமி விலகுவது போல ஒரு எண்ணம். தலை சுற்றி வாந்தி வருவது போல உணர்ந்தேன். 

அவர் போர்த்தி கொண்டு அமர்ந்தது, TTE அவரிடம் டிக்கெட் கேட்காமல் சென்றது, அவருடைய கோபம் எல்லாம் மனதிற்குள் வந்து சென்றது. 

சட்டென்று ஒரு புதர் அருகிலிருந்து அவர் வந்தார். "சார் கொஞ்சம் அவசரம், அது தான் சொல்லாம போய்ட்டேன். என்ன சார் பேய் அடிச்சமாதிரி இருக்கீங்க, நான் திடீர்னு இல்லைனதும் பயந்துடீங்க போல. ஹா ஹா ஹா" என்று சிரித்தார்.

எனக்கு நல்ல கோபம். "ஹலோ நான் திரும்ப திரும்ப சொல்றேன், பேய்னு ஒண்ணே கிடையாது. பேசாம வாங்க" என்றேன்.

அவர் என் அருகில் வந்தார். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.தன்னுடைய கையை என் தோள் மீது போட்டார். இவ்வளவு பாரத்தை நான் இது வரை சுமந்ததே இல்லை. என்னால் மூச்சு விட முடியாத அளவிற்கு பாரம் அவரது கைகள்.

அவர் இன்னும் பாரத்தை அழுத்தி கொண்டே சொன்னார், "நீங்க அப்படி சொல்லிருக்க கூடாது சார்".

நான் பூமிக்குள் மெதுவாக புதைய ஆரம்பித்தேன்.............



Wednesday, July 27, 2016

அவளும் நானும்...

அன்று ஆபிஸ் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். வெகுநேரமாக பேருந்து வரவில்லை. பஸ் ஸ்டாப்பிலும் கூட்டம் அவ்வளவாக இல்லை. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. நனையும் அளவிற்கு தூறல் இல்லை. ஆனாலும் நனைந்தபடி நின்றிருந்தேன்.

தூரத்தில் பேருந்து  வருவது தெரியவே தயாரானேன். மூச்சிரைக்க வந்த பஸ், ஸ்டாப்பில் நின்றது. உட்கார  இடம் இருக்குமா என்ற பதட்டம் வேறு. டிராபிக் நேரத்தில் ஒண்ணரை மணி நேரம் நின்று கொண்டு வீடு வருவது கொடுமை. ஏறியவுடன் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றேன். கிட்டத்தட்ட பஸ் நிறைந்திருந்தது. நொந்து கொண்டேன். ஒரு சீட் காலியாக இருந்தது. அது எதிர் எதிராக அமரும் சீட். அதில் அமர்ந்து கொண்டேன். எதிரில் ஒரு  இளைஞி. அநேகமாக IT கம்பெனியில் வேலை பார்ப்பவள் போல தான் தெரிந்தாள். அழகாவும் இருந்தாள்.

முதல் ஐந்து நிமிடம் வெளியில் மழை தூறல்களை வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தேன். அவளை நேருக்கு நேர் பார்க்கலாமா என்ற ஒரு சிறு குறுகுறுப்பு வேறு என்னை  படுத்திக்கொண்டிருந்தது . படு அலட்சியமாக திரும்புவது போல அவளை பார்த்தேன். மின்னல் போல சட்டென்று என்னை பார்த்து கொண்டிருந்த பார்வையை விலக்கினாள். இது வரை என்னை பார்த்துக்கொண்டிருந்தாள் என்ற எண்ணமே மின்சாரம் பாய்ச்சிய ஒரு நடுக்கத்தை தந்தது. முழுதும் மூடியிருந்தும் கண்ணாடியின் வழியாக தூறல் முகத்தில் தெளிப்பது போல ஒரு சிலிர்ப்பு.

நான் அவளை ரகசியமாக பார்ப்பது தெரிந்து, வெளியில் பார்ப்பது போல பாவனை செய்து கொண்டாள். சினேகமாக சிரிக்கலாமா என்று ஒரு யோசனை. சரி வேண்டாம். ஏசி காற்று பட்டு காதோரத்தில் அவள் கூந்தல் பறந்தது ஒரு கவிதை. நான் பார்த்தது  கண்டு சரி செய்து கொண்டாள். முறைப்பது போல ஒரு முகபாவம். ஆனாலும் ஏசி காற்று படும்படியாகவே அமர்ந்துகொண்டாள். கூந்தல் அழகாக பறந்துகொண்டு தான் இருந்தது.

பேருந்தில் ஒரு சில பெண்கள் ஏறினார்கள். எழுந்து இடம் கொடுக்க வேண்டுமா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். எழுவது போல லேசாக பாவனை செய்தேன். வேண்டாம் என்பது போல அவள் கண்களில் ஒரு கெஞ்சல். இல்லையில்லை மிரட்டல். மனப்பிரம்மையா. கண்டிப்பாக இருக்காது. போனில் யாரிடமோ பேசுவது போல பார்த்துக்கொண்டிருந்தேன். போனில் எனக்கு பெண் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிகொண்டிருந்தேன். களுக் என்று ஒரு சிரிப்பு. உதட்டுக்கு வெளியே வராத ஒரு புன்சிரிப்பு. எனக்கு இதயத்தில் அமிலம் ஓடிய ஒரு வெப்பம். இந்த பயணம் நீண்டு கொண்டேஇருக்காதா என்ற ஒரு ஏக்கம். என் அசைவுகளை,எண்ணங்களை ரசிக்கிறாள் என்ற எண்ணமே சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அவள் எழுந்து இறங்குவதற்கு தயாரானாள். என்னை மெதுவாக கடந்து நடந்து சென்றாள். அவள் கால் என்மீது  படவில்லை என்று அறிந்தும், பட்டதாக நினைத்து சாரி சொன்னாள். அந்த சாரி என் காதில் பலமுறை எதிரொலித்து கொண்டிருந்தது. பேருந்து நின்றது. இறங்கிவிட்டாள்.  பேருந்து மெதுவாக அவளை கடந்து சென்றது. அவள் பார்க்கவில்லை. கணமான ஒரு மௌனம். எதிர்பார்த்தலில் ஒரு ஏமாற்றம். மெதுவாக சென்ற பேருந்து சிக்னலில் நின்றது. கண்ணாடியில் தலை சாய்த்து அமர்ந்திருந்தேன். அனிச்சையாக வெளியே பார்த்தேன். பேருந்தை கடந்து நடந்து கொண்டிருந்தாள். பேருந்து கிளம்பியது. அவளை கடந்த அந்த தருணம் சலனமின்றி அமர்ந்திருந்தேன். மெதுவாக என்னை பார்த்து தலை சாய்த்து சிரித்தாள் :) :) :)


Wednesday, June 22, 2016

மனசாட்சி

நான் நடந்து கொண்டே இருந்தேன். அவனும் கூடவே வந்தான். அவனிடம் எதுவும் பேசவில்லை. பேசுவதாலும் ஒன்றும் ஆகிவிடபோவதில்லை என்று நான் நன்றாக அறிந்திருந்தேன்.  அது ஒரு மிகப்பெரிய வனம். பொட்டு வெயில் பூமியில் விழாதவாறு அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள். தங்கள் கடமை நிற்பதே என்பது போல நின்றிருந்தன. இந்த பூமியை தாங்கள் தான் இயக்குகிறோம் என்ற உண்மை தெரிந்தும் மௌனமாய் நிற்கின்றன. இயற்கையின் வனப்பை வியந்து சந்தோஷித்திருந்தேன். அவன் திடீரென்று மறைந்துவிட்டான். நான் சந்தோசமாக இருக்கும் பொழுது அவன் என்னிடம் இருப்பதில்லை. நான் அவனை தேடபோவதில்லை. என்னை விட்டு நீங்கினால் போதும் என்ற மனநிலையை எட்டி விட்டேன். அவனிடம் எனக்கு எப்பொழுதும் ஒரு சலிப்பு உண்டு. என்னை வழிநடத்துகிறேன் என்ற ஒரு மனநிலையில் என்னையே கண்காணித்து கொண்டிருக்கிறான்.  

ஒரு இறகை சுமந்துகொண்டு நடப்பது போல இருந்தால், நான் உண்மையில் மகிழ்ச்சியுடன் நடந்திருப்பேன். ஆனால் அவன் ஒரு பெரிய பாறாங்கல் போல் அல்லவா இருக்கிறான். அவனை சுமந்து கொண்டு நடப்பது ஒரு பெரிய அழுத்தமாக இருக்கிறது. சுவாசக்குழாயை அடைப்பது போல ஒரு உணர்வு.என்னை எப்பொழுதும் பின்னோக்கி இழுப்பது போல ஒரு எண்ணம். தடம் மாறுவதால் உண்டாகும் இழப்புகளை மட்டுமே என்னை சிந்திக்க வைக்கும் ஒரு மனோபாவம். இவனுடன் வாழ்ந்திட முடியுமா என்ற மாயகொக்கியை என்றென்றும் என் முதுகில் குத்தியிருப்பதை போல ஒரு உணர்ச்சி.

இவன் என்னுடன் மட்டும் தானா இருக்கிறான். நான் தனியாக நடக்கையிலும், வேதாளம் போல உப்புமூட்டையாக இருக்கிறான். உண்மையில் அவன் நம் அனைவரின் முதுகிலும் ஏறி அமர்ந்திருக்கிறான் என்கிற வரையில் எனக்கு ஒரு மெல்லிய ஆசுவாசம். ஜீவாத்மா, பரமாத்வா போல கண்ணுக்கு தெரியாமல் அடிநெஞ்சில் அழுத்திகொண்டிருக்கிறான். புவிஈர்ப்பு இல்லாத ஒரு இடம் பூமியில் இல்லாது போல , இவன் இல்லாமலும் நான் இருந்ததில்லை. மனம் அலைபாயும் பொழுதெல்லாம், அம்மா திட்ட தயங்கியபொழுதெல்லாம், அப்பா கண்டிக்க மறந்தபோதெல்லாம் இவன் தன்னுடைய கடமையை விட்டு விலகியதில்லை. இல்லாத கைகளால் என்னை அறைந்திருக்கிறான், சொல்லாத வார்த்தையால் என்னை துளைத்திருக்கிறான், வெட்கப்பட வைத்திருக்கிறான்.

எனக்கு ஏன் இவன் மேல் இவ்வளவு கோபம். என்னுடைய சந்தோசத்தை தடுப்பதாலா? என் மனம் போன போக்கில் போக அனுமதிக்காததாலா? ஒருவேளை சமுதாயத்தின் நியதிகளுக்கு உட்பட்டு என்னை நடத்துவதாலா? இருக்கலாம். இவன் என்னுடன் இருப்பதால் மட்டுமே நான் இன்றளவில் உயிர்ப்புடன் இருக்கிறேன். சமுதாயம், சட்டம், சுயஒழுக்கம், பரிவு, கருணை போன்றவற்றின் ஆதிக்கங்களை இவனிடம் கொடுத்துவிட்டதாலோ என்னவோ, செல்லும் பாதையில் ஒரு நிம்மதியை இவன் பரிசாக திரும்ப தருகிறான்.

இன்று அடர்ந்த காட்டில், இயற்க்கையின் ஆதிக்கத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். இவன் என்னிடம் இல்லை இப்பொழுது. தெரியும். தவறேதும் செய்யாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும்பொழுது இவன் ஒளிந்திருந்து பார்த்து மகிழ்கிறான்.

மனசாட்சி :) :)

Thursday, June 2, 2016

திரைப்படம் - ரசனை

எனக்கு பொதுவாகவே திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். நிறைய படங்கள் பார்க்க நிறைய பிடிக்கும். திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கபடுபவை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பொழுதுபோக்கு அதில் ஒரு அம்சம். அவ்வளவே. அந்த எல்லையையும் தாண்டி பல படிப்பினைகள் அதில் உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி திரைப்படம் பார்ப்பது ஒரு ரசனை சார்ந்த விஷயம்.

சில படங்கள் திரைக்கு வருவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பிரிந்தே, அந்த படம் சார்ந்த ஒரு உற்சாகம் நம்மிடயே தொற்றிகொள்வது உண்டு. அந்த படம் பற்றியே தெரிந்திராத நாம், அதைபற்றிய பல திட்டமிடலும், யூகங்களுடனும் நாட்களை கடத்த ஆரம்பித்துவிடுவோம். இது ஒரு உற்சாகமான மனநிலை. சமுதாயத்தில்,  தொழிலில், குடும்பத்தில் உள்ள பல அழுத்தத்திற்கு இடையையும் நம்மை நகர்த்தி கொண்டு போவது இதுபோன்ற சில காரணிகளேயன்றி வேறொன்றுமில்லை. திரைப்படங்கள் ஒருவிதமான உந்துசக்தி என்பது என்னுடைய புரிதல்.

திரைப்படம் ஆக்குதல் ஒரு கலையென்றால், அதை ரசிப்பது அதைவிட பெரிய கலையாக இருக்கவேண்டும். திரைத்துறை என்ற ஒரு பிரம்மாண்டமான கட்டமைப்பிற்கு, வியாபாரத்திற்கு நம்முடைய ரசனை அடித்தளமாக இருக்கிறது. நாம் பார்க்கும், ரசிக்கும் படங்கள் ஒருவாறாக நம்மை அடையாளபடுத்தி விடுகிறது. 

திரைஅரங்கில் படங்கள் பார்ப்பது மட்டுமே நிறைவான  பார்த்தல் அனுபவத்தை தருகிறது என்பது என் அனுமானம். நான் பொதுவாகவே படம் ஆரம்பிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே எனது இருக்கையில் சங்கமித்துவிடுவேன். ஒருவிதமாக திரைபடத்தை ரசிப்பதற்கு என்னை தயார்படுத்தும் மனநிலை இது. படம் ஆரம்பித்த பின்னும் சிலர் அரங்கிற்குள் வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சிலர் பதட்டத்தோடும், சிலர் அலட்சியதோடும் நுழைவார்கள். இவர்கள் ரயில் நிலையத்திற்கோ, விமானத்திற்கோ இப்படி செல்வதை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். திரைப்படம் தானே என்ற அலட்சியம் மட்டுமே காரணம். Tarantino, Nolan  போன்றவர்களின் படங்களிற்கு 45 நிமிடங்களுக்கு பிறகு வருவது எந்தமாதிரியான ஒரு ரசனை என்று எனக்கு புரியவில்லை. வந்தபிறகும் pop cornகு என்ன flavour சேர்த்து வாங்க வேண்டும், lunch எங்கே சாப்பிடுவது போன்ற முடிவுகளை மிகசத்தமாக எடுக்கிறார்கள். பலர் செல்பேசியில் பேசுவதற்காகவே வருகிறார்கள் போல. இதற்கு ரசனை வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, குறைந்தபட்சம் ஒரு சுயஒழுக்கம் மட்டுமே போதுமானது. படத்தை கைதட்டி, விசிலடித்து பார்ப்பதும் ரசனையின் ஒரு வெளிப்பாடே. அதில் தவறில்லை. அது அனைவரையும் ரசனையின் ஒரு மைய புள்ளியில் நம்மை இருத்திவிடுகிறது.

பலருக்கு இது பொழுதுபோக்கு மட்டுமே, மிகச்சிலருக்கு இது உணர்வு சார்ந்த/வாழ்க்கை சார்ந்த விஷயம். படங்களை ரசிப்போம், ரசிக்க செய்வோம். 

நன்றி.

Wednesday, April 27, 2016

நகரம்

நகரம் மிகப்பெரியது. பரந்துவிரிந்தது. பல உயிர்களை  தன்னுள்ளே கொண்டது. வடக்கிலிருந்து தெற்காக, மேற்கிலிருந்து கிழக்காக விரிந்து இருக்கிறது. தினமும் நிறைய அனுபவங்களை அள்ளி தருகிறது. எடுக்க எடுக்க குறையாத அனுபவங்களை கொண்ட அட்சயபாத்திரமாக உள்ளது. எதை நாம் எடுத்துகொள்ளவேண்டும் என்ற வாய்ப்பையும் நமக்கே கொடுத்து விடுகிறது. ஒரு பேருந்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டே செல்லும்போது, நகரம் பல பாடங்களை சொல்லாமல் சொல்லி விடுகிறது. ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக நம்முடைய முகத்தின் மேல் அறைந்து விடுகிறது.

நகர வாழ்க்கை மிக வேகமானது. அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாம் பயன்படுத்திகொள்ளாத வாய்ப்பை அடுத்தவர்க்கு கொடுத்து விடுகிறது. நகரம் அனைவரையும் சமநிலையில் வைத்து கொள்ளவே விரும்பிகிறது. மழை,வெள்ளம்,வெயில், புயல் போன்ற அனைத்தையும் சமமாகவே தருகிறது. அதை கையாளும் தன்மையால் மட்டுமே நம்மை பிரித்து வைக்கிறது. 


நகரத்தில் அனைவருக்கும் பிழைக்க வாய்ப்பு உள்ளது. மின்சார ரயிலில் பொருட்கள் விற்பவர் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் நகரத்தில் இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள், சோகமாக இருக்கிறார்கள், கோபமாக இருக்கிறார்கள் - ஆனால் நகரத்தில் இருக்கவே விரும்புகிறார்கள். ஏன் ?

நகர வாழ்க்கையில் ஒரு வெளிப்படையான ஒரு  போட்டி நிலவுகிறது. வாழ்க்கையில், வியாபாரத்தில், சமூகத்தில், பொருளாதாரத்தில், தரத்தில் ஒரு போட்டியிடும் தன்மை நிலவுகிறது. அது நம்மை அடுத்து கட்டத்திற்கு உந்தி தள்ளுகிறது. நம்மை வந்த பாதையில் திரும்பி போக இயலாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. சமுதாயத்தில் நமக்கான இடம் எது என்ற கேள்வியை அடிக்கடி நம்மை கேட்க வைக்கிறது. அந்த இடத்தை விட்டு கொடுத்து விடாத ஒரு மாயவலையையும் பின்னி விடுகிறது. 


நகரம் மனிதனுக்கு மட்டுமேயானது என்ற ஒரு எண்ணம் நமக்கு எப்போதுமே உண்டு. இங்கு வாழ்வதற்காண அனைத்து சுதந்திரமும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. மனிதன் தனது வாழ்வை மேம்படுத்தி கொள்வதற்கு மற்ற உயிர்களின் சுதந்திரத்தை மறுப்பது ஒரு சாபக்கேடு. இந்த உலகம் ஒரு முடிவிலா தன்மையுடையது என்ற மனிதனின் எண்ணத்தின் வெளிப்பாடு நகரத்தில் நன்றாக தெரியும். எதன்மேலும் அக்கறை இல்லா தன்மை, சக உயிர்களின் மேல் சுரக்காத கருணை, செய்கின்ற காரியங்களில் சுயநலத்தின் வெளிப்பாடு. இருந்தும் நகரம் இயங்கி கொண்டேதான் இருக்கிறது. மக்கள் சாரையாக வந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.


மக்களுக்கு நகரத்தின் மீதான ஈர்ப்பு அலாதியானது. அதன் வேகமான இயக்கம் போதையாகவும் இருக்கிறது. இங்கு வாழ்ந்துகொண்டே அதனை விமர்சிக்கும் மக்களையும் நகரம்                            சகித்து கொண்டே அரவணைக்கிறது.


மக்கள் வருவார்கள், பிழைப்பார்கள், வாழ்வார்கள், மரிப்பார்கள்  - நகரம் இயங்கிக்கொண்டே இருக்கும். அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருக்கும். ஏனென்றால் நகரம் மிகப்பெரியது.



Saturday, March 26, 2016

பயணம்

சில நாட்களாகவே நான் இதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் ஒவ்வொரு முறை இருசக்கர வாகனத்தில் இவ்வழியே செல்லும் போதெல்லாம் இதை பற்றி எழுத வேண்டும் என்று  தோன்றும். எனக்கு  எப்பொழுதும் அது ஒரு வெறுக்கத்தக்க பயணமாகவே அமைந்திருக்கிறது. ஆம். தியாகராய நகரிலிருந்து இருசக்கர வாகனத்தில் ப.ம.சா. (பழைய மகாபலிபுரம் சாலை) வழியாக  செல்லும் அனுபவம் சோர்வை தரக்கூடிய  ஒன்றாகவே எனக்கு  இருந்திருக்கிறது.

இதற்கு நிறைய காரணிகள் உள்ளது. கொஞ்சமும் நிதானமற்ற மனநிலையில் வாகனம் செலுத்தும் ஓட்டுனர்கள். பனி சுமையின் தாக்கத்தால் ஏற்படும் குழப்பமான ஒரு சூழ்நிலை. போக்குவரத்து விதிகளை மீறும் ஒரு சுவாரசியம். அதனால் ஏற்படும் பாதிப்புகளை அறியாத அல்லது அறிந்துகொள்ள விருப்பமில்லாத மனோபாவம்.


நான் இந்த வழித்தடத்தில் நிறைய விபத்துக்களை பார்த்திருக்கிறேன். அதில் பல விபத்துகள் அலட்சியத்தால் மட்டுமே ஏற்படுகிறது. அது அடுத்தவரின் மனநிலையை வெகுவாக பாதிக்கும் ஒரு அபாயம் உள்ளது. அது நம் ஆழ்நிலையில் நமக்கு வாகனம் இயக்க தெரியுமா என்ற அடிப்படை குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.விபத்தை எதிநோக்கியே வாகனத்தை செலுத்தும் ஒரு பிம்பம் நம்மை அறியாமல் ஆட்கொள்கிறது.


இதற்கெல்லாம் தீர்வு இல்லாமல் ஒன்றும் இல்லை. அனால் தீர்வை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க மனம் ஒப்புவதில்லை. இது சட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்றில்லை. தனிமனித ஒழுக்கம், சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறை, சரியான திட்டமிடல் போன்ற சில விஷயங்களினால் கூட இது சாத்தியமே.


சிலருக்கு யோசித்துக்கொண்டே வாகனம் செலுத்தும் ஒரு வழக்கம் உண்டு. அது அனிச்சை செயலாக இருக்கும். அவர்களுடைய ஆழ்மனம் வாகனத்தை  செலுத்திகொண்டிருக்கும். அதற்கு இந்த சாலை பழக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால், ஓட்டுனரை அது கேட்பதில்லை. அசாதாரமான நிகழ்வு  ஒன்று நடக்கும்போது அதால் முடிவெடுக்க இயலாமல், குழம்பி விபத்தில் முடிந்து விடுகிறது.


முடிந்தவரை யாரையும் வசைபாடாமலும் , யாரிடமும் வசைபடாமலும் சென்றாலே அது ஒரு சாதனை தான். மேலும் ஒருவரை போக்குவரத்து நெரிசலில் திட்டும் சூழ்நிலையில், அது ஒரு எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. மனிதர்களின் மேலே ஒரு தற்காலிக வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விதிகளை மீறும் ஒரு பேருந்தை  கண்டால் வரும் கோபம், அதே பேருந்தில் நாம் பயணிக்கும் பட்சத்தில் அந்த விதிமீறலை ரசிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் நமக்கு இந்த சமுதாயத்தின் மேல் இருக்கும் 
கோபம் போலியான ஒன்றாகிவிடுகிறது. சுயஇகழ்ச்சிக்கு  ஆளாகிறோம்.

இதையெல்லாம் போக்குவரத்து விதிகளை மதிப்பதால் மட்டுமே தீர்க்க இயலும். நம் வாழ்கையின் முக்கியங்களை வரிசைபடுத்தி பார்க்கும் போது, உயிர் முதலிடத்தில் இருப்பது அவசியம்.

பயணங்களை இனிமையாக்குவோம். சென்றடைவது மட்டும் பயணமல்ல, நல்ல அனுபவமாக இருப்பது தான் பயணம்.