Monday, September 25, 2017

சோளிங்கர் - ஒரு மலைப்பயணம்

அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களுடன் தினமும் மதியஉணவிற்கு பிறகு சிறிது நேரம் கதைப்பது வழக்கம். நாங்கள் அடிக்கடி விவாதிக்கும் விஷயம், ஒரு நாள் பயணமாக எங்காவது சென்று வருவது. அது பேச்சளவிலேயே இருந்து கொண்டு இருக்கும். செயல்படுத்தியது இல்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் இப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒருநாள் பயணமாக சோளிங்கர் செல்லலாம் என்று முடிவாகியது. நான், விஜய், திவாகர், முத்து மற்றும் ராஜேஷ் ஆகியோர் கொண்ட ஐவர் குழு சென்று வருவது என்று முடிவு செய்தோம். அடுத்த சவால், எப்போது செல்வது என்ற முடிவு செய்வது. அனைவருடைய நேர, கால, சூழ்நிலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 2 செல்லலாம் என்று முடிவு செய்தோம். சோளிங்கர் என்றதும் நம் மனதில் உடனே வருவது  மலைமேல் வீற்றிருக்கும் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயங்கள். இந்த பயணத்தை ஆன்மீக பயணமாக அமைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். நான் பயண வலைப்பதிவு எழுதுவதெனில் குறிப்புகள் எடுத்துக்கொள்வது வழக்கம். இம்முறை குறிப்பு எதுவும் எடுக்கவில்லை. மனதில் பதிந்தவற்றை மட்டும் எழுதுகிறேன்.

எனக்கு பயணம் செய்வது மனதுக்கு மிகவும் நெருக்கமான விஷயங்களில் ஒன்று. பயணம் என்ற சொல்லிலேயே ஒரு குதூகலம் இருப்பதாக நான் கருதுகிறேன். சிறகை விரித்து பறப்பது போல ஒரு உணர்வு. நம்மை சுற்றி பிணைந்திருக்கும் ஒரு மாயவலையை தற்காலிகமாக அவிழ்த்து வைப்பது போன்ற ஒரு எண்ணம். மனஅழுத்தத்தில் இருந்து வெளியே நம்மை கொண்டு வரும் காரணிகளில் முக்கியமான ஒன்று. நம்மை நாமே புரிந்து கொள்ள உதவும் ஒரு சுயபரீட்சை. நம்முடைய சகிப்புத்தன்மையை அறிந்து கொள்ள உதவும் ஒரு கருவி பயணம். எல்லாவற்றிற்கும் மேலே, நண்பர்களுடன் செல்லும் ஒரு நல்ல பயணம், நிறைய புத்தகங்களை படிப்பதற்கு சமம். நாங்கள் சோளிங்கர் மட்டுமே செல்வதா, அல்லது போகும் வழியில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மற்றும் திருத்தணி முருகபெருமானையும் தரிசிப்பதா என்று குழம்பி கொண்டிருந்தோம். எங்களுக்கு உள்ளதோ ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம். சோளிங்கர் தரிசனம் முடித்து, நேரம் இருந்தால் மற்ற இரு கோவில்களுக்கும் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.


செப்டம்பர் 2 காலை 5.30 மணிக்கு கிளம்பலாம் என்று முடிவாகியது. இரண்டு நாட்கள் conference கால் எல்லாம் செய்து பயணம் பற்றிய முடிவுகளை செய்தோம். விஜய் தன்னுடைய கார் கொண்டு வருவதாக கூறினார். மாருதி கார். சோளிங்கர் மலை மேல் இருப்பவரும் மாருதி. நல்ல அம்சமாக பட்டது. நான், முத்து மற்றும் திவாகர் கத்திப்பாரா மேம்பாலம் அடுத்த பட் ரோடு அருகில் காலை 5.15 அளவில் வரவேண்டும் என்று முடிவு செய்தோம். விஜய் வரும் வழியில் வேளச்சேரியில் ராஜேஷை அழைத்துகொண்டு 5.30 மணி அளவில் கத்திப்பாரா வந்து எங்களை அழைத்து கொள்வதாக ஏற்பாடு. உடல்நிலை காரணமாக திவாகரால் வர முடியவில்லை. மற்ற நான்கு பேர் மட்டும் செல்வது உறுதியாயிற்று. நான் ஒரு cab அமர்த்திகொண்டு காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினேன். இன்னும் விடியவில்லை. காற்றில் ஒரு மெல்லிய குளிர்ச்சி இருந்தது. சாலையில் ஒரு சில வண்டிகள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. தேநீர் கடைகள் மட்டும் திறந்திருந்தது. பெருமூச்சு விடுவது போல பால் பாத்திரத்தின் மேலே ஆவி பறந்துகொண்டிருந்தது. சிலர் நிதானமாக தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலை நேரத்தில் தேநீர் கடையில் "என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது" என்று உச்சஸ்தாயியில் FM அலறிக்கொண்டிருந்தது.


நான் சரியாக 5.15 மணிக்கு பட் ரோடு வந்துசேர்ந்தேன். முத்துவும் சரியாக 5.15 மணிக்கு வந்துசேர்ந்தார். நாங்கள் பேசிக்கொண்டு அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம்.இன்னமும் விடியவில்லை. தண்ணீர் லாரி போக்குவரத்து அதிகமாக  இருந்தது. தண்ணீர் பற்றாக்குறையின் தாக்கம் புரிந்தது. "Water - the Elixir of Life" என்ற வாக்கியத்தின் சாராம்சத்தை அதிகாலையில் அலறிக்கொண்டு பறக்கும் லாரியின் ஹார்ன் சத்தம் புரிய வைத்தது. விஜய், வேளச்சேரியில் இருந்து கிளம்பி விட்டதாக கூறினார். சரியாக 5.30 அளவில் பட் ரோடு வந்து சேர்ந்தார். அங்கிருந்து கிளம்பினோம். விடிய ஆரம்பித்திருந்தது. பறவைகள் கூட்டை விட்டு வெளியே பறந்துகொண்டிருந்தது. தேடலில் மட்டுமே தனக்கான உணவு கிடைக்கும் என்ற வாழ்க்கைமுறை. ஆபத்தான சூழலில் சக பறவைகளிடம் இருந்து தப்பித்து, மனிதனிடமிருந்து தப்பித்து, உணவு தேடி கூடு திரும்பும் தினசரி வாழ்க்கை. இது நமக்கும் பொருந்தும். நாங்கள் பேசிக்கொண்டே சென்றுகொண்டிருந்தோம். ஒரே அலைவரிசையில் பொருந்தும் நண்பர்களுடன் செல்லும் பயணம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். விஜய் வண்டியை சீராக ஓட்டிக்கொண்டிருந்தார். குயின்ஸ்லாந்து தீம் பார்க் கடந்து ஒரு சாலையோர கடையில் தேநீர் குடிக்க நிறுத்தினோம். மலை போல சூடான வடை குவித்துவைத்திருந்தார்கள். மொறுமொறுவென்று பொன்னிறமாக தகித்துக்கொண்டிருந்த வடைகள். ஒரு வடை, காபி அருந்தி கிளம்பினோம். திருவள்ளூர் கடந்து திருத்தணி நோக்கி சென்றோம். 7 மணி அளவில் திருத்தணி வந்தடைந்தோம். சாலையின் இடதுபுறத்தில் அறுபடை வீட்டில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். அசுரன் சூரபத்மனை வென்ற பிறகு முருகப்பெருமான் குடிகொண்ட ஸ்தலம். அருணகிரிநாதர்அவர்களின் திருப்புகழலில் முருகப்பெருமானின் குறிப்புகள் உள்ளது. "சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே..." என்கிறார். பொருள்: சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்றசுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.திருமுருகாற்றுப்படை மற்றும் தணிகை புராணம் போன்ற நூல்களில் திருத்தணி முருகனின் குறிப்புகள் உள்ளது.

நேரமின்மை காரணமாக திருத்தணியை கடந்து, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் விலகி, சோளிங்கர் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். ஏற்ற இறக்கம் கொண்ட மலைப்பாங்கான சாலை. சாலையின் இருபுறமும் பாறை குவியல்கள். பல ஆயிரம் வருடங்களாக இடம்மாறாமல் தேங்கியிருக்கும் பாறைகள். சிறிய சாலையாயினும், நேர்த்தியாக இருந்தது. நாங்கள் கடந்து சென்ற கிராமங்களில், சாலையின் இருபுறமும் மக்கள் பேருந்திற்காக காத்திருந்தார்கள். சவுக்கு மரங்கள் அதிகமும் தென்பட்டது. சோளிங்கர் வந்தடைந்தோம். மணி சுமாராக 7.30 இருக்கும். முதலில் நரசிம்மரை தரிசித்து பிறகு ஆஞ்சநேயரை தரிசிப்பதாக முடிவு செய்தோம். பேசிக்கொண்டே சென்றதில், சோளிங்கரை தாண்டி வாலாஜா செல்லும் சாலையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தோம். பிறகு உணர்ந்து, மக்களிடம் வழிகேட்டு நரசிம்மர் மலை அடிவாரத்தை வந்தடைந்தோம். வண்டியை நிறுத்தத்தில் விட்டு நடக்க ஆரம்பித்தோம்.

நிறைய அர்ச்சனை, பூ, பழ கடைகள் வரிசையாக இருந்தன. 10 ரூபாய்க்கு இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். மரக்கிளைகளில் இருந்து ஒடித்த நீண்ட கழிகளைரூ.5க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். ஊன்றி நடக்கும் அளவிற்கு வலுவான கழிகள் அன்று அவைகள். பிறகு எதற்கு விற்கிறார்கள் என்று யோசித்து கொண்டிருந்தோம். சோளிங்கர் மலைக்கோவில் என்பதால், வழியில் குரங்குகள் யாத்ரிகர்களின் கையில் இருக்கும் பழம் முதலிய தின்பண்டங்களை பறித்து கொள்வதால், அவைகளை விரட்டுவதற்காக கழிகளை எடுத்து செல்கிறார்கள். நாங்கள் இரண்டு கழிகளை வாங்கி கொண்டோம். வீரர்கள் போருக்கு ஆயுதத்தை கையில் எடுத்து செல்வது போல சென்றோம். படிகளில் ஏற ஆரம்பித்தோம். நரசிம்மர் கோவிலுக்கு செல்ல மொத்தம் 1305 படிகள். வழி முழுவதும் மழை மற்றும் வெயில் தாக்கம் இல்லாதிருக்கும் பொருட்டு கூரை அமைத்திருக்கிறார்கள். வழியின் இரு புறங்களிலும் பெருமாள் நாமாவளிக்களை எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு 100 படிகள் கடக்கும்பொழுதும் கடந்து வந்த படிகளின் எண்ணிக்கையை பார்க்க முடிகிறது. நிறைய பிச்சைக்கார்கள் அமர்ந்திருந்தார்கள். அகலமான பாறை படிகள். மக்கள் நேராக படியில் ஏறாமல் இடது வலதாக படியின் குறுக்கே நடந்து ஏறுகிறார்கள். இது மூச்சுவிடும் சிரமத்தை குறைக்கிறது. நாங்கள் நிதானமாக முன்னேறிக்கொண்டிருந்தோம். 500 படிகள் கடந்த பிறகு ஒரு சிறிய மண்டபம் ஒன்றில் ஒரு கடை இருந்தது. அங்கே தண்ணீர் ரூ.30 க்கு விற்கிறார்கள். லெமன் சோடா ஒரு கோப்பை ரூ. 25. அதிகம் தான் விலை. வேறு வழியும் இல்லை, எதுவும் குடிக்காமல் நடக்க இயலாது. டோலி வசதி இருக்கிறது. ஒரு சிறிய நாற்காலி போன்ற அமைப்பில், பயணியை அமர வைத்து இருவர் தூக்கி செல்கிறார்கள். மிகவும் சிரமமான வேலை. நாங்கள் மேலும் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியெங்கும் சிறு மண்டபங்கள் இருக்கின்றன. நுரையீரலுக்கு சென்று திரும்பும் காற்றை நாங்கள் நன்றாக உணர்ந்தோம். நுரையீரலுக்கு அதிகமான உடற்பயிற்சி. மெதுவாக நடந்து கோவில் கோபுரத்தின் அருகில் வந்தடைந்தோம். கோபுரத்தின் நுழைவாயிலில் அமர்ந்தோம். பேரமைதி. இந்த பேரண்டத்தின் ஒரு மூலையின் இருக்கும் நிசப்தத்தின் ஒரு அமைதியை போல. மலையுச்சியில் காற்றின் தழுவலை போல ஒரு அமைதி. போதும் என்ற மனம் கொண்ட மனிதனின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் அமைதி.



கோவிலுக்குள் நடந்து சென்றோம். சோளிங்கர் என்று தற்போது வழங்கப்பெறும் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில்  வழங்கப்பெற்றுள்ளது என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தில் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். இதன் மற்றொரு பெயர் கடிகாசலம் ஆகும். நரசிம்ம பெருமாள் பிரஹலாதன் மற்றும் அடிகளாருக்கு கடிகை மாத்திரை பொழுதில் இம்மலை மீது யோகா நிலையில் காட்சியளித்ததால் இது கடிகாசலம் என்று பெயர் பெற்றது. பெரிய மலையில் 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளது. சிறிய மலையில் 17ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளது. தர்மதரிசனம் மற்றும் கட்டண தரிசன வழிகள் இருக்கிறது நரசிம்மரை தரிசிப்பதற்கு. கட்டண தரிசனம் ரூ.20. நாங்கள் கட்டண தரிசன வரிசையில் நின்றோம். வரிசை மெதுவாக நகர்ந்து சென்றது. 5-6 படிகள் மீது ஏறி நரசிம்மரை தரிசனம் செய்தோம். யோகா நிலையில் வீற்றிருக்கும் நரசிம்மர். தரிசனம் செய்து வெளியே வந்து தீர்த்தம் பெற்றுக்கொண்டோம். ஒரு உத்தரணி தீர்த்தத்தை முகத்தில் தெளிக்கிறார்கள்.  இது திருஷ்டியை கழிக்கும் என்று நம்பப்படுகிறது. மெதுவாக பிரகாரத்தை சுற்றிக்கொண்டு மடப்பள்ளியை நோக்கி வந்தோம். காலையிலுருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. 1300 படிகள் ஏறிய களைப்பு கால் நடுக்கத்தை ஏற்படுத்தியது. நன்றாக பசிக்க ஆரம்பித்திருந்தது. பசி ஒரு அக்கினி போல. நெருப்புக்குண்டம் போல. உள்ளே கனன்றுகொண்டே இருக்கும்.எதையும் பொசுக்கி பஸ்பமாக்கி விடும். அக்கினியை கட்டுப்படுத்த மட்டுமே முடியும், அணைக்க முடியாது. அது எரிந்து கொண்டிருந்தால் தான் இந்த உடம்பு இயங்கி கொண்டிருக்கிறது என்று பொருள். அதை மட்டுப்படுத்தும் பொருட்டு மடப்பள்ளி நோக்கி சென்றோம். ஒரு மர பெஞ்ச் ஒன்றின் மேல் நான்கு பெரிய அண்டாக்கள் இருந்தது. எட்டி பார்த்தோம். கண்களில் ஒரு மின்னல் வெட்டு. அக்கினி தன்னுடைய நாக்கை நன்றாக சுழற்றி கொண்டிருப்பதை உணர்ந்தோம். அண்டாக்களில் வெண்பொங்கல், புளிசாதம், சக்கரை பொங்கல், தயிர் சாதம், மிளகு தட்டை இருந்தது.தொன்னையில் பிரசாதத்தை தருகிறார்கள். அனைத்திலும் இரண்டு தொன்னை வாங்கி கொண்டோம். உள்ளே ஒரு சிறிய மண்டபம் போன்ற அறையில் மக்கள் அமர்ந்து பிரசாதம் சாப்பிடுகிறார்கள். அருமையான பிரசாதம். நாக்கில் நர்த்தனமாடும் சுவை. கண்களில் ஒரு ஒளி தெரிய பெற்றது. மலை இறங்க ஆரம்பித்தோம். சற்று வேகமாகவே இறங்கலானோம். வரும் வழியில் காவியுடை அணிந்த துறவிகள் அமர்ந்திருந்தார்கள். பக்தர்களிடம் யாசகம் கேட்கிறார்கள். அவர்களுக்கான உலகம் வேறு. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பக்தர்களை வாழ்த்துகிறார்கள். முகத்தில் ஒரு புன்முறுவல் தவழ்ந்து கொண்டிருந்தது. சில பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி, கற்பூரம் ஏற்றி மேலே ஏறிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பக்தி மற்றும் நம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது. இரண்டு பன்னீர் சோடா குடித்து விட்டு கீழே இறங்கி ஆஞ்சநேயர் மலை நோக்கி பயணப்பட்டோம்.



ஆஞ்சநேயர் சிறிய திருவடி என்று ஆழைக்கப்படுகிறார். கருடன் பெரிய திருவடி என்று போற்றப்படுகிறார். ஆஞ்சநேயர் மலை பெரிய மலையிலிருந்து 1 km தூரத்தில் இருக்கிறது. ஆஞ்சநேயர் மலையில் மொத்தம் 400 படிகள் மட்டுமே. கூட்டம் அவ்வளவாக இல்லை. வேகமாக ஏறிவிட்டோம். இங்கேயும் தர்மதரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் உண்டு. சிறப்பு தரிசனம் ரூ.20. கூட்டம் இல்லாததால் சீக்கிரம் தரிசனம் செய்து விட்டோம். மூலவர் யோக ஆஞ்சநேயர் யோகாசனத்தில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். நான்கு கைகளுடன் மேற்கைகளில் வலத்தே சக்கரம், இடப்புறத்தில் சங்கு, மற்ற கைகளில் ஜப மாலை, ஜப சங்குடன் காட்சி தருகிறார். உற்சவருக்கு சதுர்புஜம் நின்ற திருக்கோலம்.திவ்யதரிசனம். கண்குளிர தரிசித்தோம். பிரகாரம் சுற்றி வந்து மடப்பள்ளி நோக்கி புறப்பட்டோம். சக்கரை பொங்கல் மற்றும் மிளகு வடை. சோளிங்கர் கோவில் பிரசாதத்தின் ருசி மிகவும் அலாதியானது.நரசிம்மரையும், ஆஞ்சநேயரையும் மனம் குளிர, கண் குளிர தரிசித்துவிட்டு, வயிறு குளிர பிரசாதம் சாப்பிடுவது வார்த்தைகளால் எளிதில் சொல்லி விவரிக்கமுடியாது. அது அனுபவித்து பார்க்க வேண்டிய ஒன்று.மலை இறங்கி கீழே வந்தோம். மொத்தம் 3400 படிகள் ஏறி இறங்கிருக்கிறோம். உச்சிப்பொழுது மற்ற கோவில்களில் நடை சாத்திருப்பார்கள். நேராக வீடு திரும்பி விடுவது என்று முடிவு செய்தோம்.



வரும் வழியில், பாதை விலகி திருத்தணி நகருக்கு உள்ளே சென்று விட்டோம். சிறிய சாலை, வாகன நெருக்கடியான சாலை. மக்கள் சாரை சாரையாக நடந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் தவறாக வந்ததற்கு வருத்தப்பட்டோம். வேறொன்றும் செய்ய இயலாது. சிறிது நேரத்தில் ஒரு ரயில் பாதை குறுக்கிட்டது. ரயில் வரும் நேரமாதலால் பாதையை அடைத்து வைத்திருந்தார்கள். இருபுறமும் நல்ல வாகன கூட்டம். 15 நிமிடம் காத்திருந்தோம். சிறிய சாலை, அதிகப்படியான வாகன நெருக்கடி, அதில் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவது மிகவும் சவாலானது. விஜய் மிகவும் சிறப்பாக வாகனத்தை செலுத்தினார். சென்னையை நோக்கி பயணமானோம். திருவள்ளூர் தாண்டி குயின்ஸ்லாந்து அருகில் உள்ள ஹைவே மெட்ரோ என்ற உணவகத்தில் மதிய உணவை முடித்து கொண்டோம். நல்ல ருசியான உணவு. எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.விஜய், என்னையும் முத்துவையும் வடபழனி அருகே இறக்கி விட்டார். நான் அங்கிருந்து 27சி பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். தரையில் நடக்கும் போதும் படிகள் மேல் ஏறுவது போல ஒரு பிரம்மை. கால் தரையின் மீதுதான் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்து கொண்டேன். நண்பர்களுடன் ஒரு நல்ல ஆன்மீக பயணம் மேற்கொண்ட திருப்தி. நண்பர்களுக்கு நன்றி.