Saturday, April 15, 2017

நிழல்

நான் அலுவலகம் செல்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்தேன். கதவை திறந்து வெளியே வந்தபொழுது தான் லேசாக தூறிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஒரு நிமிடம் யோசித்து நின்றேன். மண்ணிலிருந்து கிளம்பிய அந்த வாசனை மூக்கை துளைத்தது. மெல்லிய இருள் எங்கும் படர்ந்திருந்தது. தெளிந்த நீர் சலனமின்றி சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. ஆரவாரம் இல்லாத ஒரு காலை பொழுது. செயற்கைத்தனம் இல்லாத சாலைகள், மனிதர்கள் கடைகளில் தேநீர் சுவைத்து கொண்டிருந்தார்கள், புகைத்து கொண்டிருந்தார்கள். மனிதனிடம் ஒருவித நிதானத்தை கொண்டுவரும் ஆற்றல் மழைக்கு உண்டு. ஒருவராக நம்மை சோம்பேறி ஆகிவிடுகிறது. நான் லேசாக நனைந்தபடி பேருந்து நிலையம் வந்தடைந்தேன். நான் செல்லவேண்டிய குளிர்சாதன பேருந்து நின்றிருந்தது. டிக்கெட் வாங்கி பேருந்தின் பின்புற இருக்கையில் ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டேன். என் அருகில் இருந்த சீட் காலியாகவே இருந்தது. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. மொபைலில் பாடல் கேட்க ஆரம்பித்தேன். "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" ஜானகி அம்மா குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். மக்கள் தூறலில் நனையாமல் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

அவர் பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார். நீல நிற உடை அணிந்து, அரைகுறையாக இன் செய்திருந்தார். வயது சுமார் 60க்குள் இருக்கலாம்.  நான்கு நாட்கள் சவரம் செய்யாத முகம். சற்று சோகமாக காணப்பட்டார். கையில் பழைய வாட்ச் ஒன்று அணிந்திருந்தார். மழை தூறலில் இருந்து தப்பிக்க ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்றை தலையில் கவிழ்த்திருந்தார். கையில் சாப்பாட்டு கூடை இருந்தது. நான் இதுவரை அவரை இந்த பேருந்து நிலையத்தில் பார்த்ததில்லை. ஏதோ ஒரு பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நான் அமர்ந்திருந்த பேருந்தின் போர்டு பார்த்துவிட்டு, நடத்துனரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். அவர் சொன்ன பதிலை கேட்டு ஏமாற்றத்துடன் வெளியே சென்று அசௌகரியமாக நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கிழித்து மீண்டும் நடத்துனரிடம் ஏதோ கேட்டு, அவர் சப்தம் போடவே, டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே வந்தார். என் அருகில் இருந்த சீட் தவிர அனைத்தும் ஒருவாராக நிரம்பிருந்தது. தயக்கத்துடன் என் அருகில் நின்றார். சீட்டின் விளிம்பில் அமர்ந்தார். நான் பாடல் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அவர் என்னிடம் ஏதோ கேட்பதற்காக தயங்கிக்கொண்டிருந்தார். "சார், இந்த bus சிறுசேரி போகும்ல" என்றார். headphones கழட்டிவிட்டு "போகும்" என்றேன். 

"சார், டிக்கெட் 50 ரூபாவா" என்றார். "ஆமாம், AC பஸ்ல 50 ரூபா" என்றேன்.

சரி என்றார். தன்னுடைய பழைய வாட்ச்சில் மணி பார்த்தார். "எப்போ சார் போய் சேரும் " என்றார்.

"எப்படியும் 1 மணி நேரம் ஆகிடும்" என்றேன். "சரி சார்" என்றார்.

அதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. நான் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் ஏதோ கேட்க வேண்டும் என்பது போல இருந்தார். அவரும் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பெரிய கட்டிடங்களை அண்ணாந்து பார்த்தார். சிறிது நேரம் யோசித்தார். "சார் இது எல்லாம் என்ன கம்பெனி" என்றார். நான், "இது IT கம்பெனி" என்றேன். "அப்படினா" என்றார். பிறகு அவரே "கம்ப்யூட்டர் கம்பெனியா" என்றார். நான் ஆமாம் என்றேன். "நீங்களும் இது ஒண்ணுலதான் வேலை பாக்கறீங்களா சார்" என்றார். "ம்" என்றேன். "கம்ப்யூட்டர் கம்பெனினா என்ன சார் பண்ணுவாங்க" என்றார். எனக்கு அவருக்கு எப்படி சொல்வது என்று புரியவில்லை. என்னுடன் வேலை பாக்கும் என் நண்பனிடமே எனக்கு சரியாக சொல்ல தெரியாது. "தெரியலையா விட்ருங்க சார்" என்று அப்பாவியாக சொன்னார். நான் அவரை பார்த்து சிரித்தேன். குழந்தை போல சிரித்தார். 

"நீங்க எங்க போறீங்க" என்றேன். " நான் ஒரு கம்பெனில செக்யூரிட்டி வேலை பாக்கிறேன் சார்" என்றார். "பொண்டாட்டிக்கு உடம்புக்கு முடியல, சமைச்சி வெச்சிட்டு, மருந்து வாங்கி கொடுத்துட்டு வரேன், நேரம் ஆயிடுச்சு அது தான் இந்த பஸ்ல போக வேண்டியதாயுடுச்சு சார்" என்றார். "டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலையா" என்றேன். உதட்டை பிதுக்கினார். "மாசம் 6000 கொடுக்கறாங்க. பஸ்ஸுக்கு, வாடகை, சாப்பாட்டுக்கே சரியா போயிடுது" என்றார் 

"சார் கம்ப்யூட்டர் கம்பெனில நல்ல சம்பளம் கொடுப்பாங்க தானே" என்றார். "நல்லாவே கொடுப்பாங்க" என்றேன். "சந்தோசம் சார்" என்றார். "என்ன ஏதும் வேலைக்கு போக போறீங்களா" என்றேன். சிரித்துக்கொண்டே, "என் மவன் இதுல ஏதோ ஒரு கம்பெனில தான் வேலை பாக்கறான், நல்லா இருக்கட்டும்" என்றார். நான் சீட்டின் நுனிக்கு வந்தேன். "நீங்க அவர் கூட இல்லையா, ஏன் செக்யூரிட்டி வேலைக்கு போறீங்க" என்றேன். "நமக்கு இந்த வாழ்க்கை முறை, சாப்பாடு, கலாச்சாரம், பேசற முறை எதுவும் சரியா வரலயாம். அவனுக்கு கஷ்டமாயிருக்கு போல. யாராவது வீட்டுக்கு வந்தா நமக்கு சரியாய் பேச வரலயாம். என் பொண்டாட்டி தான் பாவம். அவளுக்கு எதுவும் புரியல. சரின்னு நாங்க தனியா சொல்லிக்காம வந்துட்டோம்" என்றார். 

"சார் உங்க சட்டை நல்லாயிருக்கு, என்ன 300-400 ரூபா இருக்குமா" என்றார். சிரித்துக்கொண்டே "1800 ரூபாய்" என்றேன். "இது மாதிரி ஒண்ணு என் மவனுக்கு வாங்கி தரணும்" என்றார் ஆசையாக. 

"சரி ஊரிலேயே இருக்கலாம் தானே" என்றேன். "இருந்த சொத்தை எல்லாம் வித்து அவனை படிக்க வெச்சிட்டேன், வெளிநாட்டுக்கு போய் படிக்கணும்னு சொன்னான். இனிமே ஊருல ஒன்னும் இல்லை தம்பி" என்றார். அவர் என்னிடம் சற்று நெருங்கி பேசினார். சார் என்பதற்கு பதில் தம்பி என்றார். 

நான் எதுவும் பேசவில்லை. வெளியே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்த கட்டிடங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அதுஎல்லாம் வேறு ஒரு உலகமோ என்ற எண்ணம் வந்தது. போலியான ஒரு வட்டத்தில் நம்மை கொண்டு சென்று விட்டது போல ஒரு எண்ணம். அம்மா அப்பாவிடம் ஆறுதலாக உடனே பேசவேண்டும் போல தோன்றியது. அவர் உடல் உழைத்து களைத்திருந்தது. கை, முகங்களில் சுருக்கம். ஆனால் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் நிறைய இருந்தது.

"ஊர்ல என்ன வேலை பார்த்துட்டு இருந்தீங்க" என்றேன்.

"விவசாயம் தம்பி. பத்து ஏக்கர்ல விவசாயம் பாத்துட்டு ராணி மாதிரி என் பொண்டாட்டிய பாத்துட்டு இருந்தேன் தம்பி. எல்லாத்தையும் வித்துட்டேன்" என்று வெளியே பார்த்து சீட்டில் சாய்ந்து கொண்டார். நான் அசைவற்று அமர்ந்திருந்தேன். நான் எதுவும் பேசவில்லை. ஊருக்கே சோறுபோட்ட மனிதர், கையில் ஒரு சிறிய டிபன் பாக்ஸில் சாப்பாடு கட்டிக்கொண்டு, இது என்ன மாதிரியான சமுதாய மாற்றம் என்று புரிந்துகொள்ள முடியாமல், சமூகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு, 60 வயதில் உடல் தளர்ந்த நிலையில் கிடைத்த வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார். எங்கிருந்து இந்த மாற்றம் ஆரம்பித்தது. பெற்றோரை தவிக்கவிட்டு, சமுதாயத்தில் எதை ஜெயிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம். என்னுடைய கால்கள் ஜில்லென்று ஆகி விட்டது. என் தவிப்பை அவர் புரிந்திருப்பார் என்று நினைக்கிறன். நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. 

எழுந்து இரண்டு அடி நடந்தேன். திரும்ப வந்து அவர் முன் நின்று தயக்கத்துடன், "எங்களை எல்லாம் மன்னிச்சிடுங்க" என்றேன். சிரித்துக்கொண்டே, என் தோள் மீது கை வைத்து "எல்லாரும் நல்லா இருங்க தம்பி" என்றார்.

நான் பேருந்தில் இருந்து இறங்கி, நிறுத்தத்தில் நின்றிருந்தேன். பேருந்து என்னை கடந்து மெதுவாக சென்றது. குழந்தை போல என்னை பார்த்து கை காட்டி சிரித்தார். நானும் கையசைத்து சிரித்தேன்.  

(கற்பனை)