Saturday, October 28, 2017

கானல்

வருடம் - அக்டோபர் 2008:  

மாலை சுமார் 4 மணி இருக்கும். வானம் மேகமூட்டமாய் இருந்தது. லேசான சாரல் முகத்தில் ஊசி போல குத்திக்கொண்டிருந்தது. அவன் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தான். அவன் அரக்கோணம் செல்ல வேண்டும். மின்சார ரயிலில் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தான். பயணச்சீட்டு வாங்கும் இடத்தை நோக்கி நடக்கலானான். சாரை சாரையாய் மக்கள். பள்ளம் நோக்கி ஓடும் நீர் போல வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவன் காகித கப்பல் போல அக்கூட்டத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்தான். பயணச்சீட்டு தரும் இடத்தில் நீண்ட வரிசை. ஒரு பூரான் போல. ஒரு வரிசையில் நின்றுகொண்டான். வரிசை வேகவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. சிலர் வரிசையில் குறுக்கே வந்து நின்றார்கள்.  இவர்கள் இடையில் வந்து நின்றவர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள். இவர்களை முறைத்து கொண்டே வரிசையின் இடையில் நின்றுகொண்டார்கள். முணுமுணுத்துக்கொண்டே முறைத்தார்கள். பூரான் நகர்ந்து கொண்டே இருந்தது. அவன் முறை வந்தது. அவன், "ஒரு அரக்கோணம்" என்று கூறி கோவில் கோபுரத்தின் நுழைவாயிலின் சிறிய வடிவம் போல இருக்கும் துளையின் உள்ளே பணத்தை நுழைத்தான். உள்ளே இருந்தவர் இயந்திரத்திலிருந்து பயணச்சீட்டை இயந்திரத்தனமாக எடுத்து மீதி சில்லறையுடன் கொடுத்தார். அவன் சீட்டை எடுக்கும் முன்பே, இன்னும் நகரவில்லையா என்பது போல பார்த்து, "Next" என்று குரல் கொடுத்தார். அவன் நகர ஆரம்பித்தான். ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் "தர்மராசா" என்று கையை நீட்டினார். அவன் கையிலிருந்த மீதி சில்லறையில் ரூ.5 ஐ அவரிடம் கொடுத்தான். அவர் "தர்மராசா நல்லா இருக்கணும், உங்களுக்கு எல்லாம் நல்லா நடக்கும்" என்று அழுக்கு பல் தெரிய சிரித்தார்.

அவன் வேகமாக நடைமேடையை நோக்கி நடந்தான். அங்கே அரக்கோணம் செல்லும் ரயில் தயாராக இருந்தது. ரயிலின் உள்ளே சென்று, சுற்றி ஒரு முறை நோட்டம் விட்டான். உட்கார்வதற்கு இடம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு நுழைவாயிலின் எதிர்புறம் உள்ள வழியின் ஓரம் நின்றுகொண்டான். வண்டி இன்னமும் புறப்படவில்லை. ரயிலில் பலதரப்பட்ட மக்கள். மாணவர்கள், சிறு வியாபாரிகள், குடும்பத்தலைவிகள், தொழிலாளர்கள். இது அவர்கள் தினமும் செல்லும் ரயில்வண்டி. அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல. ஒரு தாய் தொட்டிலில் குழந்தையை தாலாட்டுவதை போல, அவர்களை இந்த ரயில் தினமும் தாலாட்டி அழைத்து செல்கிறது. வண்டி கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. அவன் பிளாட்பாரத்தை அனிச்சையாக பார்த்தான். அவள் வேகமாக ஓடிவந்து அவன் இருந்த பெட்டியில் ஏறினாள். கையில் ஒரு பெரிய சக்கரம் வைத்த பெட்டி. உட்கார இடம் இல்லை என்று தெரிந்து கொண்டு இவனுக்கு எதிரில் வந்து நின்று கொண்டாள். பெட்டியை அருகில் வைத்து கொண்டாள். அவனை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே பார்க்க ஆரம்பித்தாள். வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது.

வருடம் - அக்டோபர் 2017:

மாலை 4 மணி. வானம் கருப்பு போர்வை போர்த்திருந்தது. விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது. அரக்கோணம் ரயில் நிலையம் பரபரப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் படபடப்புடன் ஓடி, "2 சென்னை" என்று பயணசீட்டு வாங்கிக்கொண்டு நடைமேடைக்கு வந்து சேர்ந்தார்கள். நடைமேடையில் சென்னைக்கு செல்லும் மின்சார ரயில் தயாராக இருந்தது. அவன் கையில் குழந்தையை தூக்கி கொண்டு வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். அவள் அவனை பின்தொடர்ந்து ஓடி கொண்டிருந்தாள். அவர்கள் வண்டியில் ஏறவும் வண்டி புறப்படவும் சரியாக இருந்தது. வண்டியில் உட்கார இடமில்லை. நேராக நுழைவாயிலின் அருகில் நின்றுகொண்டார்கள்.  அவள் முகம் சூடான எண்ணையில் விழுந்த கடுகை போல வெடித்துக்கொண்டிருந்தது. அவன் அவளை பார்க்கவில்லை. "ஒரு இடம் புடிக்க வழியில்லை, இப்படியேவா சென்னை வரைக்கும் நின்னுகிட்டு போறது, அதுவும் படிகிட்ட. எல்லாம் என் தலையெழுத்து" என்று கடுகடுத்தாள். அவன் வெளியே வெறித்துக்கொண்டிருந்தான்.

வருடம் - அக்டோபர் 2008:

வண்டி மெதுவாக பேசின் பிரிட்ஜ் வந்து சேர்ந்தது. கூட்டம் ஏற ஆரம்பித்தது. அவள் பெட்டியை நகர்த்தி ஒரு அடி நகர்ந்து அவன் அருகில் நின்றாள். அவன் வெளியே வேடிக்கை பார்ப்பது போல அவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டான். முகத்தில் அறைந்த காற்றில் பறக்கும் கூந்தலை ஆள்காட்டி விரலால் காதின் பின்னால் வைத்து சரி செய்தாள். அதை மீறியும் ஒரு கற்றை கூந்தல் அவன் கண்களில் விழுந்தது. அவள் அவன் முகத்தை பார்த்து எந்த சலனமுமில்லாமல்"சாரி" என்றாள். அவனுக்கு ரயில் சத்தத்தை மீறி இதயம்  துடித்துக்கொண்டிருந்தது. "நீங்க எங்க போகணும்" என்று கேட்டான். அவள் அதை கவனிக்காததை போல், பின்னே வேகமாக நகரும் கட்டிடங்களை பார்க்க ஆரம்பித்தாள். கூட்டம் படியை நோக்கி நகர ஆரம்பித்தது. வேகமாக நகர்ந்த ஒருவரின் கால் பட்டு, அவளுடைய பெட்டி வெளியே விழ நேர்ந்த பொழுது, அவன் அதை லாவகமாக பிடித்து காப்பாற்றி விட்டான். அதை அவளும் பார்த்துவிட்டாள். அவள் சிநேகமுடன் "ரொம்ப தேங்க்ஸ்" என்று சிரித்து கொண்டே சொன்னாள். அவனும் சிரித்து கொண்டே "நீங்க எங்க போகணும்" என்றான். அவள் சிரித்து கொண்டே "அரக்கோணம். ரயிலில் படிகிட்ட நின்னு காத்து வாங்கிகிட்டு போறதே தனி சுகம்" என்றாள். அவனும் சிரித்து கொண்டே "ஆமாம்" என்றான். உள்ளே அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் அருகில் ஒரு இடம் காலியாகியது. அவள் அங்கு போக எத்தனித்து, திரும்ப வந்து நின்று படிஅருகே நின்று கொண்டாள். அவர்களை பற்றி நிறைய பேசிக்கொண்டே இருந்தார்கள். செல் நம்பர் பரிமாறிக்கொண்டார்கள். அடிக்கடி கண்ணோடு கண் பார்த்து சிரித்து கொண்டார்கள்.

வருடம் - அக்டோபர் 2017:

ரயில் அரக்கோணத்திலிருந்து இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வந்திருந்தது. இன்னமும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. படியின் ஓரம் நின்றிருந்தார்கள். "இப்படியேவா படிகிட்ட நின்னுகிட்டு போறது, காத்து அடிக்கிது, போய் இடம் இருக்கானு பாருங்க" என்று அவனை கத்திக்கொண்டிருந்தாள். அவன் குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு முறை பார்த்துவிட்டு வந்து "இல்லை" என்றான்.  அவள் கடுகடுவென முறைத்தாள். "ஏன் உங்க அப்பா கிட்ட சொல்லி ஒரு கார்ல வரலாம்ல, ஏன் அது கூட முடியாதா அவரால" என்றான். "அப்பறம் நீங்க எதுக்கு புருஷன்னு இருக்கீங்க, நீங்க தான் பாத்துக்கணும். 10 வருஷம் முன்னே நான் அந்த ரயில்ல வந்துருக்க கூடாது. எல்லாம் விதி" என்றாள். "கீழ விழ போன பெட்டியை அப்படியே விட்டுருக்கணும். பெரிய ஹீரோ மாதிரி காப்பாத்தி இப்போ அனுபவிக்கிறேன்" என்றான். அவர்கள் சண்டை அதிகமாக ஆரம்பித்தது. அவன் கையில் இருந்த குழந்தை எதுவும் புரியாமல் அழ ஆரம்பித்தது. அதற்குள் ஆவடி ரயில் நிலையம் வந்திருந்தது. அவர்கள் சண்டை நிற்கவில்லை.

வருடம் - அக்டோபர் 2008:

ரயில் ஆவடி நிலையம் வந்திருந்தது. அவர்கள் இன்னமும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எதிரே நின்றிருந்த சென்னைக்கு செல்லும் மின்சார ரயில் படியில் யாரோ ஒரு கணவன் மனைவி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரு நொடி யோசிக்க ஆரம்பித்து, பின்னர் சிரித்து பேசிகொள்ள ஆரம்பித்தார்கள். ரயில் ஆவடியிலிருந்து கிளம்பியது. என்ன தோன்றியதோ, ஒரு முறை சென்னைக்கு சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலை ஒரு முறை பார்த்தான். அவள் "என்ன" என்றாள். "ஒண்ணுமில்லை" என்றான். ரயில் சிறிது நேரத்தில் அரக்கோணம் வந்து சேர்ந்தது. உள்ளே இடம் இருந்தும் இவர்கள் உட்காராமல் படியருகே நின்று பேசிக்கொண்டே வந்தார்கள். இறங்கியவுடன் "நான் அப்பறம் போன் பண்றேன்" என்று கூறி சிரித்து கொண்டே விடை பெற்றாள். 

வருடம் - அக்டோபர் 2017:

அவர்களுக்கு கடைசி வரை உட்கார இடம் கிடைக்கவே இல்லை. நின்று கொண்டே வந்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தார்கள். இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அவன் குழந்தையுடன் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தான். ரயில் நிலையத்தின் வெளியே வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் "தர்மராசா" என்று கை நீட்டினார். அவன் பையிலிருந்து ரூ. 5 எடுத்து கொடுத்தான். "தர்மராசா நல்ல இருக்கணும், உங்களுக்கு எல்லாம் நல்லா நடக்கும்" என்று அழுக்கு பல் தெரிய சிரித்தார். அவன் ஒரு நொடி நின்று, "இப்போவாவது நீங்க சொல்றது பலிக்கட்டும்" என்று நடக்க ஆரம்பித்தான். இருவரையும் பார்த்து அவர் மறுபடியும் சிரித்தார். 

Monday, September 25, 2017

சோளிங்கர் - ஒரு மலைப்பயணம்

அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களுடன் தினமும் மதியஉணவிற்கு பிறகு சிறிது நேரம் கதைப்பது வழக்கம். நாங்கள் அடிக்கடி விவாதிக்கும் விஷயம், ஒரு நாள் பயணமாக எங்காவது சென்று வருவது. அது பேச்சளவிலேயே இருந்து கொண்டு இருக்கும். செயல்படுத்தியது இல்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் இப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒருநாள் பயணமாக சோளிங்கர் செல்லலாம் என்று முடிவாகியது. நான், விஜய், திவாகர், முத்து மற்றும் ராஜேஷ் ஆகியோர் கொண்ட ஐவர் குழு சென்று வருவது என்று முடிவு செய்தோம். அடுத்த சவால், எப்போது செல்வது என்ற முடிவு செய்வது. அனைவருடைய நேர, கால, சூழ்நிலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 2 செல்லலாம் என்று முடிவு செய்தோம். சோளிங்கர் என்றதும் நம் மனதில் உடனே வருவது  மலைமேல் வீற்றிருக்கும் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயங்கள். இந்த பயணத்தை ஆன்மீக பயணமாக அமைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். நான் பயண வலைப்பதிவு எழுதுவதெனில் குறிப்புகள் எடுத்துக்கொள்வது வழக்கம். இம்முறை குறிப்பு எதுவும் எடுக்கவில்லை. மனதில் பதிந்தவற்றை மட்டும் எழுதுகிறேன்.

எனக்கு பயணம் செய்வது மனதுக்கு மிகவும் நெருக்கமான விஷயங்களில் ஒன்று. பயணம் என்ற சொல்லிலேயே ஒரு குதூகலம் இருப்பதாக நான் கருதுகிறேன். சிறகை விரித்து பறப்பது போல ஒரு உணர்வு. நம்மை சுற்றி பிணைந்திருக்கும் ஒரு மாயவலையை தற்காலிகமாக அவிழ்த்து வைப்பது போன்ற ஒரு எண்ணம். மனஅழுத்தத்தில் இருந்து வெளியே நம்மை கொண்டு வரும் காரணிகளில் முக்கியமான ஒன்று. நம்மை நாமே புரிந்து கொள்ள உதவும் ஒரு சுயபரீட்சை. நம்முடைய சகிப்புத்தன்மையை அறிந்து கொள்ள உதவும் ஒரு கருவி பயணம். எல்லாவற்றிற்கும் மேலே, நண்பர்களுடன் செல்லும் ஒரு நல்ல பயணம், நிறைய புத்தகங்களை படிப்பதற்கு சமம். நாங்கள் சோளிங்கர் மட்டுமே செல்வதா, அல்லது போகும் வழியில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மற்றும் திருத்தணி முருகபெருமானையும் தரிசிப்பதா என்று குழம்பி கொண்டிருந்தோம். எங்களுக்கு உள்ளதோ ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம். சோளிங்கர் தரிசனம் முடித்து, நேரம் இருந்தால் மற்ற இரு கோவில்களுக்கும் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.


செப்டம்பர் 2 காலை 5.30 மணிக்கு கிளம்பலாம் என்று முடிவாகியது. இரண்டு நாட்கள் conference கால் எல்லாம் செய்து பயணம் பற்றிய முடிவுகளை செய்தோம். விஜய் தன்னுடைய கார் கொண்டு வருவதாக கூறினார். மாருதி கார். சோளிங்கர் மலை மேல் இருப்பவரும் மாருதி. நல்ல அம்சமாக பட்டது. நான், முத்து மற்றும் திவாகர் கத்திப்பாரா மேம்பாலம் அடுத்த பட் ரோடு அருகில் காலை 5.15 அளவில் வரவேண்டும் என்று முடிவு செய்தோம். விஜய் வரும் வழியில் வேளச்சேரியில் ராஜேஷை அழைத்துகொண்டு 5.30 மணி அளவில் கத்திப்பாரா வந்து எங்களை அழைத்து கொள்வதாக ஏற்பாடு. உடல்நிலை காரணமாக திவாகரால் வர முடியவில்லை. மற்ற நான்கு பேர் மட்டும் செல்வது உறுதியாயிற்று. நான் ஒரு cab அமர்த்திகொண்டு காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினேன். இன்னும் விடியவில்லை. காற்றில் ஒரு மெல்லிய குளிர்ச்சி இருந்தது. சாலையில் ஒரு சில வண்டிகள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. தேநீர் கடைகள் மட்டும் திறந்திருந்தது. பெருமூச்சு விடுவது போல பால் பாத்திரத்தின் மேலே ஆவி பறந்துகொண்டிருந்தது. சிலர் நிதானமாக தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலை நேரத்தில் தேநீர் கடையில் "என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது" என்று உச்சஸ்தாயியில் FM அலறிக்கொண்டிருந்தது.


நான் சரியாக 5.15 மணிக்கு பட் ரோடு வந்துசேர்ந்தேன். முத்துவும் சரியாக 5.15 மணிக்கு வந்துசேர்ந்தார். நாங்கள் பேசிக்கொண்டு அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம்.இன்னமும் விடியவில்லை. தண்ணீர் லாரி போக்குவரத்து அதிகமாக  இருந்தது. தண்ணீர் பற்றாக்குறையின் தாக்கம் புரிந்தது. "Water - the Elixir of Life" என்ற வாக்கியத்தின் சாராம்சத்தை அதிகாலையில் அலறிக்கொண்டு பறக்கும் லாரியின் ஹார்ன் சத்தம் புரிய வைத்தது. விஜய், வேளச்சேரியில் இருந்து கிளம்பி விட்டதாக கூறினார். சரியாக 5.30 அளவில் பட் ரோடு வந்து சேர்ந்தார். அங்கிருந்து கிளம்பினோம். விடிய ஆரம்பித்திருந்தது. பறவைகள் கூட்டை விட்டு வெளியே பறந்துகொண்டிருந்தது. தேடலில் மட்டுமே தனக்கான உணவு கிடைக்கும் என்ற வாழ்க்கைமுறை. ஆபத்தான சூழலில் சக பறவைகளிடம் இருந்து தப்பித்து, மனிதனிடமிருந்து தப்பித்து, உணவு தேடி கூடு திரும்பும் தினசரி வாழ்க்கை. இது நமக்கும் பொருந்தும். நாங்கள் பேசிக்கொண்டே சென்றுகொண்டிருந்தோம். ஒரே அலைவரிசையில் பொருந்தும் நண்பர்களுடன் செல்லும் பயணம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். விஜய் வண்டியை சீராக ஓட்டிக்கொண்டிருந்தார். குயின்ஸ்லாந்து தீம் பார்க் கடந்து ஒரு சாலையோர கடையில் தேநீர் குடிக்க நிறுத்தினோம். மலை போல சூடான வடை குவித்துவைத்திருந்தார்கள். மொறுமொறுவென்று பொன்னிறமாக தகித்துக்கொண்டிருந்த வடைகள். ஒரு வடை, காபி அருந்தி கிளம்பினோம். திருவள்ளூர் கடந்து திருத்தணி நோக்கி சென்றோம். 7 மணி அளவில் திருத்தணி வந்தடைந்தோம். சாலையின் இடதுபுறத்தில் அறுபடை வீட்டில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். அசுரன் சூரபத்மனை வென்ற பிறகு முருகப்பெருமான் குடிகொண்ட ஸ்தலம். அருணகிரிநாதர்அவர்களின் திருப்புகழலில் முருகப்பெருமானின் குறிப்புகள் உள்ளது. "சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே..." என்கிறார். பொருள்: சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்றசுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.திருமுருகாற்றுப்படை மற்றும் தணிகை புராணம் போன்ற நூல்களில் திருத்தணி முருகனின் குறிப்புகள் உள்ளது.

நேரமின்மை காரணமாக திருத்தணியை கடந்து, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் விலகி, சோளிங்கர் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். ஏற்ற இறக்கம் கொண்ட மலைப்பாங்கான சாலை. சாலையின் இருபுறமும் பாறை குவியல்கள். பல ஆயிரம் வருடங்களாக இடம்மாறாமல் தேங்கியிருக்கும் பாறைகள். சிறிய சாலையாயினும், நேர்த்தியாக இருந்தது. நாங்கள் கடந்து சென்ற கிராமங்களில், சாலையின் இருபுறமும் மக்கள் பேருந்திற்காக காத்திருந்தார்கள். சவுக்கு மரங்கள் அதிகமும் தென்பட்டது. சோளிங்கர் வந்தடைந்தோம். மணி சுமாராக 7.30 இருக்கும். முதலில் நரசிம்மரை தரிசித்து பிறகு ஆஞ்சநேயரை தரிசிப்பதாக முடிவு செய்தோம். பேசிக்கொண்டே சென்றதில், சோளிங்கரை தாண்டி வாலாஜா செல்லும் சாலையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தோம். பிறகு உணர்ந்து, மக்களிடம் வழிகேட்டு நரசிம்மர் மலை அடிவாரத்தை வந்தடைந்தோம். வண்டியை நிறுத்தத்தில் விட்டு நடக்க ஆரம்பித்தோம்.

நிறைய அர்ச்சனை, பூ, பழ கடைகள் வரிசையாக இருந்தன. 10 ரூபாய்க்கு இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். மரக்கிளைகளில் இருந்து ஒடித்த நீண்ட கழிகளைரூ.5க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். ஊன்றி நடக்கும் அளவிற்கு வலுவான கழிகள் அன்று அவைகள். பிறகு எதற்கு விற்கிறார்கள் என்று யோசித்து கொண்டிருந்தோம். சோளிங்கர் மலைக்கோவில் என்பதால், வழியில் குரங்குகள் யாத்ரிகர்களின் கையில் இருக்கும் பழம் முதலிய தின்பண்டங்களை பறித்து கொள்வதால், அவைகளை விரட்டுவதற்காக கழிகளை எடுத்து செல்கிறார்கள். நாங்கள் இரண்டு கழிகளை வாங்கி கொண்டோம். வீரர்கள் போருக்கு ஆயுதத்தை கையில் எடுத்து செல்வது போல சென்றோம். படிகளில் ஏற ஆரம்பித்தோம். நரசிம்மர் கோவிலுக்கு செல்ல மொத்தம் 1305 படிகள். வழி முழுவதும் மழை மற்றும் வெயில் தாக்கம் இல்லாதிருக்கும் பொருட்டு கூரை அமைத்திருக்கிறார்கள். வழியின் இரு புறங்களிலும் பெருமாள் நாமாவளிக்களை எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு 100 படிகள் கடக்கும்பொழுதும் கடந்து வந்த படிகளின் எண்ணிக்கையை பார்க்க முடிகிறது. நிறைய பிச்சைக்கார்கள் அமர்ந்திருந்தார்கள். அகலமான பாறை படிகள். மக்கள் நேராக படியில் ஏறாமல் இடது வலதாக படியின் குறுக்கே நடந்து ஏறுகிறார்கள். இது மூச்சுவிடும் சிரமத்தை குறைக்கிறது. நாங்கள் நிதானமாக முன்னேறிக்கொண்டிருந்தோம். 500 படிகள் கடந்த பிறகு ஒரு சிறிய மண்டபம் ஒன்றில் ஒரு கடை இருந்தது. அங்கே தண்ணீர் ரூ.30 க்கு விற்கிறார்கள். லெமன் சோடா ஒரு கோப்பை ரூ. 25. அதிகம் தான் விலை. வேறு வழியும் இல்லை, எதுவும் குடிக்காமல் நடக்க இயலாது. டோலி வசதி இருக்கிறது. ஒரு சிறிய நாற்காலி போன்ற அமைப்பில், பயணியை அமர வைத்து இருவர் தூக்கி செல்கிறார்கள். மிகவும் சிரமமான வேலை. நாங்கள் மேலும் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியெங்கும் சிறு மண்டபங்கள் இருக்கின்றன. நுரையீரலுக்கு சென்று திரும்பும் காற்றை நாங்கள் நன்றாக உணர்ந்தோம். நுரையீரலுக்கு அதிகமான உடற்பயிற்சி. மெதுவாக நடந்து கோவில் கோபுரத்தின் அருகில் வந்தடைந்தோம். கோபுரத்தின் நுழைவாயிலில் அமர்ந்தோம். பேரமைதி. இந்த பேரண்டத்தின் ஒரு மூலையின் இருக்கும் நிசப்தத்தின் ஒரு அமைதியை போல. மலையுச்சியில் காற்றின் தழுவலை போல ஒரு அமைதி. போதும் என்ற மனம் கொண்ட மனிதனின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் அமைதி.



கோவிலுக்குள் நடந்து சென்றோம். சோளிங்கர் என்று தற்போது வழங்கப்பெறும் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில்  வழங்கப்பெற்றுள்ளது என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தில் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். இதன் மற்றொரு பெயர் கடிகாசலம் ஆகும். நரசிம்ம பெருமாள் பிரஹலாதன் மற்றும் அடிகளாருக்கு கடிகை மாத்திரை பொழுதில் இம்மலை மீது யோகா நிலையில் காட்சியளித்ததால் இது கடிகாசலம் என்று பெயர் பெற்றது. பெரிய மலையில் 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளது. சிறிய மலையில் 17ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளது. தர்மதரிசனம் மற்றும் கட்டண தரிசன வழிகள் இருக்கிறது நரசிம்மரை தரிசிப்பதற்கு. கட்டண தரிசனம் ரூ.20. நாங்கள் கட்டண தரிசன வரிசையில் நின்றோம். வரிசை மெதுவாக நகர்ந்து சென்றது. 5-6 படிகள் மீது ஏறி நரசிம்மரை தரிசனம் செய்தோம். யோகா நிலையில் வீற்றிருக்கும் நரசிம்மர். தரிசனம் செய்து வெளியே வந்து தீர்த்தம் பெற்றுக்கொண்டோம். ஒரு உத்தரணி தீர்த்தத்தை முகத்தில் தெளிக்கிறார்கள்.  இது திருஷ்டியை கழிக்கும் என்று நம்பப்படுகிறது. மெதுவாக பிரகாரத்தை சுற்றிக்கொண்டு மடப்பள்ளியை நோக்கி வந்தோம். காலையிலுருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. 1300 படிகள் ஏறிய களைப்பு கால் நடுக்கத்தை ஏற்படுத்தியது. நன்றாக பசிக்க ஆரம்பித்திருந்தது. பசி ஒரு அக்கினி போல. நெருப்புக்குண்டம் போல. உள்ளே கனன்றுகொண்டே இருக்கும்.எதையும் பொசுக்கி பஸ்பமாக்கி விடும். அக்கினியை கட்டுப்படுத்த மட்டுமே முடியும், அணைக்க முடியாது. அது எரிந்து கொண்டிருந்தால் தான் இந்த உடம்பு இயங்கி கொண்டிருக்கிறது என்று பொருள். அதை மட்டுப்படுத்தும் பொருட்டு மடப்பள்ளி நோக்கி சென்றோம். ஒரு மர பெஞ்ச் ஒன்றின் மேல் நான்கு பெரிய அண்டாக்கள் இருந்தது. எட்டி பார்த்தோம். கண்களில் ஒரு மின்னல் வெட்டு. அக்கினி தன்னுடைய நாக்கை நன்றாக சுழற்றி கொண்டிருப்பதை உணர்ந்தோம். அண்டாக்களில் வெண்பொங்கல், புளிசாதம், சக்கரை பொங்கல், தயிர் சாதம், மிளகு தட்டை இருந்தது.தொன்னையில் பிரசாதத்தை தருகிறார்கள். அனைத்திலும் இரண்டு தொன்னை வாங்கி கொண்டோம். உள்ளே ஒரு சிறிய மண்டபம் போன்ற அறையில் மக்கள் அமர்ந்து பிரசாதம் சாப்பிடுகிறார்கள். அருமையான பிரசாதம். நாக்கில் நர்த்தனமாடும் சுவை. கண்களில் ஒரு ஒளி தெரிய பெற்றது. மலை இறங்க ஆரம்பித்தோம். சற்று வேகமாகவே இறங்கலானோம். வரும் வழியில் காவியுடை அணிந்த துறவிகள் அமர்ந்திருந்தார்கள். பக்தர்களிடம் யாசகம் கேட்கிறார்கள். அவர்களுக்கான உலகம் வேறு. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பக்தர்களை வாழ்த்துகிறார்கள். முகத்தில் ஒரு புன்முறுவல் தவழ்ந்து கொண்டிருந்தது. சில பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி, கற்பூரம் ஏற்றி மேலே ஏறிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பக்தி மற்றும் நம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது. இரண்டு பன்னீர் சோடா குடித்து விட்டு கீழே இறங்கி ஆஞ்சநேயர் மலை நோக்கி பயணப்பட்டோம்.



ஆஞ்சநேயர் சிறிய திருவடி என்று ஆழைக்கப்படுகிறார். கருடன் பெரிய திருவடி என்று போற்றப்படுகிறார். ஆஞ்சநேயர் மலை பெரிய மலையிலிருந்து 1 km தூரத்தில் இருக்கிறது. ஆஞ்சநேயர் மலையில் மொத்தம் 400 படிகள் மட்டுமே. கூட்டம் அவ்வளவாக இல்லை. வேகமாக ஏறிவிட்டோம். இங்கேயும் தர்மதரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் உண்டு. சிறப்பு தரிசனம் ரூ.20. கூட்டம் இல்லாததால் சீக்கிரம் தரிசனம் செய்து விட்டோம். மூலவர் யோக ஆஞ்சநேயர் யோகாசனத்தில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். நான்கு கைகளுடன் மேற்கைகளில் வலத்தே சக்கரம், இடப்புறத்தில் சங்கு, மற்ற கைகளில் ஜப மாலை, ஜப சங்குடன் காட்சி தருகிறார். உற்சவருக்கு சதுர்புஜம் நின்ற திருக்கோலம்.திவ்யதரிசனம். கண்குளிர தரிசித்தோம். பிரகாரம் சுற்றி வந்து மடப்பள்ளி நோக்கி புறப்பட்டோம். சக்கரை பொங்கல் மற்றும் மிளகு வடை. சோளிங்கர் கோவில் பிரசாதத்தின் ருசி மிகவும் அலாதியானது.நரசிம்மரையும், ஆஞ்சநேயரையும் மனம் குளிர, கண் குளிர தரிசித்துவிட்டு, வயிறு குளிர பிரசாதம் சாப்பிடுவது வார்த்தைகளால் எளிதில் சொல்லி விவரிக்கமுடியாது. அது அனுபவித்து பார்க்க வேண்டிய ஒன்று.மலை இறங்கி கீழே வந்தோம். மொத்தம் 3400 படிகள் ஏறி இறங்கிருக்கிறோம். உச்சிப்பொழுது மற்ற கோவில்களில் நடை சாத்திருப்பார்கள். நேராக வீடு திரும்பி விடுவது என்று முடிவு செய்தோம்.



வரும் வழியில், பாதை விலகி திருத்தணி நகருக்கு உள்ளே சென்று விட்டோம். சிறிய சாலை, வாகன நெருக்கடியான சாலை. மக்கள் சாரை சாரையாக நடந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் தவறாக வந்ததற்கு வருத்தப்பட்டோம். வேறொன்றும் செய்ய இயலாது. சிறிது நேரத்தில் ஒரு ரயில் பாதை குறுக்கிட்டது. ரயில் வரும் நேரமாதலால் பாதையை அடைத்து வைத்திருந்தார்கள். இருபுறமும் நல்ல வாகன கூட்டம். 15 நிமிடம் காத்திருந்தோம். சிறிய சாலை, அதிகப்படியான வாகன நெருக்கடி, அதில் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவது மிகவும் சவாலானது. விஜய் மிகவும் சிறப்பாக வாகனத்தை செலுத்தினார். சென்னையை நோக்கி பயணமானோம். திருவள்ளூர் தாண்டி குயின்ஸ்லாந்து அருகில் உள்ள ஹைவே மெட்ரோ என்ற உணவகத்தில் மதிய உணவை முடித்து கொண்டோம். நல்ல ருசியான உணவு. எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.விஜய், என்னையும் முத்துவையும் வடபழனி அருகே இறக்கி விட்டார். நான் அங்கிருந்து 27சி பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். தரையில் நடக்கும் போதும் படிகள் மேல் ஏறுவது போல ஒரு பிரம்மை. கால் தரையின் மீதுதான் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்து கொண்டேன். நண்பர்களுடன் ஒரு நல்ல ஆன்மீக பயணம் மேற்கொண்ட திருப்தி. நண்பர்களுக்கு நன்றி.









Sunday, July 2, 2017

காலம் - 1

எனக்கு உடல் தீடீரென்று அசதியாக இருந்தது. சாப்பிட்டு விட்டு தூங்கலாம் என்றால் அது வரை பொறுமை இல்லை. ஆனால் பசி மட்டும் வயிற்றை கிள்ளியது.  அதிகப்படியான பசி வயிற்றை குமட்டியது. எருக்களிப்பது போன்ற ஒரு உணர்வு. வேகமாக அள்ளி நான்கு கவளம் முழுங்கி விட்டு படுத்துவிட்டேன். அரைகுறையான தூக்கம். கால்கள் இரண்டும் வெட்டி இழுப்பது போல ஒரு உணர்வு. யானை தன் கால்களால் அழுத்தி மிதிப்பது போல வலி. சத்தம் போட்டு கத்த வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சப்தம் எழவில்லை. நாக்கு மட்டும் தன்னிச்சையாக குழறி கொண்டிருந்தது. இது போல ஒரு உணர்வு இதுவரை எனக்கு ஆனதில்லை. தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் எழ முடியவில்லை. "தண்ணீர், தண்ணீர்" என்று மெதுவாக உளறிக்கொண்டிருந்தேன். யாரோ ஒரு பெரியவர் ஒரு ஜாடியில் தண்ணீர் கொண்டுவருவது தெரிந்து மெதுவாக கண் விழித்தேன். அருகில் வந்த அவர் தண்ணீரை குடிக்க தரவில்லை. அவர் ஜாடி தண்ணீரை என் முகத்தில் அப்படியே ஊற்றிவிட்டார். பயத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.

கண்களை விழித்து பார்த்தேன். என் முகத்தில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.  வெகுநாட்கள் தூங்கி எழுந்தது போல ஒரு புத்துணர்ச்சி. சுற்றி பார்த்தேன். அருகில் ஒரு ஓடை. தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறிய பாறையின் மீதிருந்து தண்ணீர் என் முகத்தின் மீது விழுந்துகொண்டிருந்தது. இது என்னுடைய படுக்கையறை இல்லை. எழுந்து மெதுவாக நடக்கலானேன். இப்பொழுது நல்ல பசி எடுக்க ஆரம்பித்தது. ஓடையின் கரையில் நடக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ஒரு சிறிய குடிசை தெரிந்தது. குடிசையின் மேலே புகை வந்துகொண்டிருந்தது. கண்டிப்பாக குடிசையில் யாரோ சமைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற நினைப்பே பசியை தூண்டியது. குடிசையின் வாயிலை அடைந்து "சார் சார்" என்று அழைத்தேன். ஒரு பெண்மணி வெளியே வந்தார். என்னை ஒருமுறை பார்த்து"யார் நீங்கள், உங்களுக்கு யார் வேண்டும், எந்த நாடு நீங்கள்" என்றார். எனக்கு ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். ஒருவர் ஓடையிலிருந்து பரிசலில் அந்த குடிசையை நோக்கி வந்தார். இந்த பெண்மணியின் கணவனாக இருக்க வேண்டும். "எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள், ஓடையின் அக்கரைக்கு செல்ல வேண்டுமா" என்றார். நான் மிகுந்த குழப்பத்துடன் "சார், எனக்கு ஒன்றும் புரியவில்லை, பசிக்கிறது" என்றேன்.
"மன்னியுங்கள், வீட்டின் உள்ளே வாருங்கள்" என்றார். குளிப்பதற்கு சூடான நீர் கொடுத்தார். அவருடைய உடை ஒன்றை கொடுத்தார். மிகவும் வித்தியாசமான உடை. எனது பள்ளி நாட்களில் ஆண்டு விழா நாடகங்களில் இது போல உடை அணிந்த ஞாபகம் வந்தது. சட்டென்று மனதில் ஒரு மின்னல். திரும்ப ஒருமுறை அவர்களின் வீட்டை நோட்டம் விட்டேன். சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். மின்சார பொருட்கள் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எதுவும் அங்கு இல்லை. ஐயோ, இது என்ன, நான் எங்கு வந்துவிட்டேன் ? கடைசியாக அந்த பெரியவர் முகத்தில் தண்ணீர் ஊற்றியது மட்டும் ஞாபகம் வந்தது. "ஐயா வாருங்கள், உணவு அருந்தலாம்" என்றார். அரச இலை போன்ற ஒன்றின் மீது கம்பு அடை இரண்டு, கீரை கூட்டு இருந்தது. நல்ல பசி. இன்னும் இரண்டு அடை கேட்டு சாப்பிட்டேன். ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன். அவர், "நான்  நகரத்திற்கு செல்கிறேன்" என்றார். நானும் வருகிறேன் என்று அந்த பெண்மணியிடம் நன்றி சொல்லி விட்டு கிளம்பினேன்.

அவரது பரிசலில் அக்கரைக்கு கிளம்பினோம். "ஐயா இது என்ன ஆறு" என்றேன். "வெண்ணாறு" என்றார். "நாம் இப்பொழுது எங்கே செல்கிறோம்" என்றேன். "தஞ்சைக்கு" என்றார். "தஞ்சை", நான் பிறந்து வளர்ந்த ஊர் ஆயிற்றே!!! இப்பொழுது வேலை நிமித்தம் சென்னையில் இருக்கிறேன். இது என்ன நான் பரிசலில் தஞ்சைக்கு போய்க்கொண்டிருக்கிறேன் !!! வெண்ணாற்றின் கரை வந்தடைந்தோம். அவர் பரிசலை ஒரு மரத்தில் கட்டினார். "வாருங்கள் போகலாம்" என்றார். நான் மினி பஸ் வரும் என்ற நினைப்பில் இருந்தேன். பிறகு சுதாரித்து கொண்டேன், மனதில் சிரித்து கொண்டேன். அது தஞ்சைக்கு செல்லும் ராஜபாட்டை என்று கூறினார். இரு பக்கமும் விசாலமான மாளிகைகள். திண்ணையில் மக்கள் அமர்ந்து தாயம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். குதிரையில் வீரர்கள், கையில் வேலுடன் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நான் மிரட்சியுடன் நடந்துகொண்டிருந்தேன்.  தஞ்சைபுரீஸ்வரரை வணங்கி நடக்கலானோம். கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. மக்கள் ஆரவாரமுடன் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். வழிப்போக்கர்களுக்கு நீர்மோர், பானகம் தந்தார்கள். அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. வழிப்போக்கர்கள் திண்ணையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வீட்டின் தலைவர் வெற்றிலை பாக்கு வைத்து தாம்பூலம் கொடுத்தார். மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

நாங்கள் ஒருவர் வீட்டில் உணவருந்தி, சிறிது ஓய்வெடுத்தோம். நல்ல உறக்கம். பரிசல்காரர் தனக்கு சிறிய வேலை இருப்பதாகவும், இரவு உணவு அருந்த வீட்டிற்கு வந்துவிடவேண்டும் என்று கையை பிடித்து உரிமையுடன் கூறினார். நான் நன்றி கூறினேன். பிறகு நான் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். அந்த இடம் வடக்கு மாட வீதி என்று அறிந்து கொண்டேன். மேல வீதி வழியாக நடந்து சென்றேன். தூரத்தில் இமயமலை ஒன்று நிற்பது போல ஒரு கோவில். ஆம். அது பெருவுடையார் ஆலயம். தஞ்சை பெரிய கோவில். கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் நெருங்க நெருங்க அது இன்னும் வளர்ந்து கொண்டிருப்பது போல உணர்ந்தேன். சட்டென்று ஒரு பரபரப்பு. காவலர்கள் வழி ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள். நான் ஓரமாக நின்றேன். நல்ல கூட்டம். நான் அருகில் இருந்தவரிடம், "ஐயா, இன்று என்ன விஷேஷம், யார் வருகிறார்கள், ஏன் இந்த பரபரப்பு" என்றேன். "மாமன்னர் வருகிறார்" என்றார். "மாமன்னர், யார் ஐயா" என்று தயக்கத்துடன் கேட்டேன். ஒரு நொடி என்னை பார்வையால் சுடுவது போல பார்த்தார். "மாமன்னர் ராஜராஜர் வருகிறார்" என்று வானத்தை நோக்கி கும்பிட்டு கூறினார். எனக்கு உடம்பில் ஒரு மின்னல் வெட்டிய உணர்ச்சி. கை, கால் பரபரக்க ஆரம்பித்தது. கண்களில் என்னை அறியாமல் ஆனந்த கண்ணீர்."மாமன்னர் ராஜராஜர் வாழ்க" என்று நானும் என்னையறியாமல் கூட்டத்துடன் கூறினேன். திடீரென்று எங்கும் ஒரு நிசப்தம். தூரத்தில் மாமன்னர் தேரில் வருவது தெரிந்தது. எங்கும் ஒரே ஆரவாரம், "சோழம், சோழம், சோழம், சோழம்"....

(கற்பனை தொடரும்)...

Saturday, April 15, 2017

நிழல்

நான் அலுவலகம் செல்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்தேன். கதவை திறந்து வெளியே வந்தபொழுது தான் லேசாக தூறிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஒரு நிமிடம் யோசித்து நின்றேன். மண்ணிலிருந்து கிளம்பிய அந்த வாசனை மூக்கை துளைத்தது. மெல்லிய இருள் எங்கும் படர்ந்திருந்தது. தெளிந்த நீர் சலனமின்றி சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. ஆரவாரம் இல்லாத ஒரு காலை பொழுது. செயற்கைத்தனம் இல்லாத சாலைகள், மனிதர்கள் கடைகளில் தேநீர் சுவைத்து கொண்டிருந்தார்கள், புகைத்து கொண்டிருந்தார்கள். மனிதனிடம் ஒருவித நிதானத்தை கொண்டுவரும் ஆற்றல் மழைக்கு உண்டு. ஒருவராக நம்மை சோம்பேறி ஆகிவிடுகிறது. நான் லேசாக நனைந்தபடி பேருந்து நிலையம் வந்தடைந்தேன். நான் செல்லவேண்டிய குளிர்சாதன பேருந்து நின்றிருந்தது. டிக்கெட் வாங்கி பேருந்தின் பின்புற இருக்கையில் ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டேன். என் அருகில் இருந்த சீட் காலியாகவே இருந்தது. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. மொபைலில் பாடல் கேட்க ஆரம்பித்தேன். "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" ஜானகி அம்மா குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். மக்கள் தூறலில் நனையாமல் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

அவர் பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார். நீல நிற உடை அணிந்து, அரைகுறையாக இன் செய்திருந்தார். வயது சுமார் 60க்குள் இருக்கலாம்.  நான்கு நாட்கள் சவரம் செய்யாத முகம். சற்று சோகமாக காணப்பட்டார். கையில் பழைய வாட்ச் ஒன்று அணிந்திருந்தார். மழை தூறலில் இருந்து தப்பிக்க ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்றை தலையில் கவிழ்த்திருந்தார். கையில் சாப்பாட்டு கூடை இருந்தது. நான் இதுவரை அவரை இந்த பேருந்து நிலையத்தில் பார்த்ததில்லை. ஏதோ ஒரு பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நான் அமர்ந்திருந்த பேருந்தின் போர்டு பார்த்துவிட்டு, நடத்துனரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். அவர் சொன்ன பதிலை கேட்டு ஏமாற்றத்துடன் வெளியே சென்று அசௌகரியமாக நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கிழித்து மீண்டும் நடத்துனரிடம் ஏதோ கேட்டு, அவர் சப்தம் போடவே, டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே வந்தார். என் அருகில் இருந்த சீட் தவிர அனைத்தும் ஒருவாராக நிரம்பிருந்தது. தயக்கத்துடன் என் அருகில் நின்றார். சீட்டின் விளிம்பில் அமர்ந்தார். நான் பாடல் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அவர் என்னிடம் ஏதோ கேட்பதற்காக தயங்கிக்கொண்டிருந்தார். "சார், இந்த bus சிறுசேரி போகும்ல" என்றார். headphones கழட்டிவிட்டு "போகும்" என்றேன். 

"சார், டிக்கெட் 50 ரூபாவா" என்றார். "ஆமாம், AC பஸ்ல 50 ரூபா" என்றேன்.

சரி என்றார். தன்னுடைய பழைய வாட்ச்சில் மணி பார்த்தார். "எப்போ சார் போய் சேரும் " என்றார்.

"எப்படியும் 1 மணி நேரம் ஆகிடும்" என்றேன். "சரி சார்" என்றார்.

அதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. நான் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் ஏதோ கேட்க வேண்டும் என்பது போல இருந்தார். அவரும் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பெரிய கட்டிடங்களை அண்ணாந்து பார்த்தார். சிறிது நேரம் யோசித்தார். "சார் இது எல்லாம் என்ன கம்பெனி" என்றார். நான், "இது IT கம்பெனி" என்றேன். "அப்படினா" என்றார். பிறகு அவரே "கம்ப்யூட்டர் கம்பெனியா" என்றார். நான் ஆமாம் என்றேன். "நீங்களும் இது ஒண்ணுலதான் வேலை பாக்கறீங்களா சார்" என்றார். "ம்" என்றேன். "கம்ப்யூட்டர் கம்பெனினா என்ன சார் பண்ணுவாங்க" என்றார். எனக்கு அவருக்கு எப்படி சொல்வது என்று புரியவில்லை. என்னுடன் வேலை பாக்கும் என் நண்பனிடமே எனக்கு சரியாக சொல்ல தெரியாது. "தெரியலையா விட்ருங்க சார்" என்று அப்பாவியாக சொன்னார். நான் அவரை பார்த்து சிரித்தேன். குழந்தை போல சிரித்தார். 

"நீங்க எங்க போறீங்க" என்றேன். " நான் ஒரு கம்பெனில செக்யூரிட்டி வேலை பாக்கிறேன் சார்" என்றார். "பொண்டாட்டிக்கு உடம்புக்கு முடியல, சமைச்சி வெச்சிட்டு, மருந்து வாங்கி கொடுத்துட்டு வரேன், நேரம் ஆயிடுச்சு அது தான் இந்த பஸ்ல போக வேண்டியதாயுடுச்சு சார்" என்றார். "டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலையா" என்றேன். உதட்டை பிதுக்கினார். "மாசம் 6000 கொடுக்கறாங்க. பஸ்ஸுக்கு, வாடகை, சாப்பாட்டுக்கே சரியா போயிடுது" என்றார் 

"சார் கம்ப்யூட்டர் கம்பெனில நல்ல சம்பளம் கொடுப்பாங்க தானே" என்றார். "நல்லாவே கொடுப்பாங்க" என்றேன். "சந்தோசம் சார்" என்றார். "என்ன ஏதும் வேலைக்கு போக போறீங்களா" என்றேன். சிரித்துக்கொண்டே, "என் மவன் இதுல ஏதோ ஒரு கம்பெனில தான் வேலை பாக்கறான், நல்லா இருக்கட்டும்" என்றார். நான் சீட்டின் நுனிக்கு வந்தேன். "நீங்க அவர் கூட இல்லையா, ஏன் செக்யூரிட்டி வேலைக்கு போறீங்க" என்றேன். "நமக்கு இந்த வாழ்க்கை முறை, சாப்பாடு, கலாச்சாரம், பேசற முறை எதுவும் சரியா வரலயாம். அவனுக்கு கஷ்டமாயிருக்கு போல. யாராவது வீட்டுக்கு வந்தா நமக்கு சரியாய் பேச வரலயாம். என் பொண்டாட்டி தான் பாவம். அவளுக்கு எதுவும் புரியல. சரின்னு நாங்க தனியா சொல்லிக்காம வந்துட்டோம்" என்றார். 

"சார் உங்க சட்டை நல்லாயிருக்கு, என்ன 300-400 ரூபா இருக்குமா" என்றார். சிரித்துக்கொண்டே "1800 ரூபாய்" என்றேன். "இது மாதிரி ஒண்ணு என் மவனுக்கு வாங்கி தரணும்" என்றார் ஆசையாக. 

"சரி ஊரிலேயே இருக்கலாம் தானே" என்றேன். "இருந்த சொத்தை எல்லாம் வித்து அவனை படிக்க வெச்சிட்டேன், வெளிநாட்டுக்கு போய் படிக்கணும்னு சொன்னான். இனிமே ஊருல ஒன்னும் இல்லை தம்பி" என்றார். அவர் என்னிடம் சற்று நெருங்கி பேசினார். சார் என்பதற்கு பதில் தம்பி என்றார். 

நான் எதுவும் பேசவில்லை. வெளியே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்த கட்டிடங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அதுஎல்லாம் வேறு ஒரு உலகமோ என்ற எண்ணம் வந்தது. போலியான ஒரு வட்டத்தில் நம்மை கொண்டு சென்று விட்டது போல ஒரு எண்ணம். அம்மா அப்பாவிடம் ஆறுதலாக உடனே பேசவேண்டும் போல தோன்றியது. அவர் உடல் உழைத்து களைத்திருந்தது. கை, முகங்களில் சுருக்கம். ஆனால் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் நிறைய இருந்தது.

"ஊர்ல என்ன வேலை பார்த்துட்டு இருந்தீங்க" என்றேன்.

"விவசாயம் தம்பி. பத்து ஏக்கர்ல விவசாயம் பாத்துட்டு ராணி மாதிரி என் பொண்டாட்டிய பாத்துட்டு இருந்தேன் தம்பி. எல்லாத்தையும் வித்துட்டேன்" என்று வெளியே பார்த்து சீட்டில் சாய்ந்து கொண்டார். நான் அசைவற்று அமர்ந்திருந்தேன். நான் எதுவும் பேசவில்லை. ஊருக்கே சோறுபோட்ட மனிதர், கையில் ஒரு சிறிய டிபன் பாக்ஸில் சாப்பாடு கட்டிக்கொண்டு, இது என்ன மாதிரியான சமுதாய மாற்றம் என்று புரிந்துகொள்ள முடியாமல், சமூகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு, 60 வயதில் உடல் தளர்ந்த நிலையில் கிடைத்த வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார். எங்கிருந்து இந்த மாற்றம் ஆரம்பித்தது. பெற்றோரை தவிக்கவிட்டு, சமுதாயத்தில் எதை ஜெயிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம். என்னுடைய கால்கள் ஜில்லென்று ஆகி விட்டது. என் தவிப்பை அவர் புரிந்திருப்பார் என்று நினைக்கிறன். நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. 

எழுந்து இரண்டு அடி நடந்தேன். திரும்ப வந்து அவர் முன் நின்று தயக்கத்துடன், "எங்களை எல்லாம் மன்னிச்சிடுங்க" என்றேன். சிரித்துக்கொண்டே, என் தோள் மீது கை வைத்து "எல்லாரும் நல்லா இருங்க தம்பி" என்றார்.

நான் பேருந்தில் இருந்து இறங்கி, நிறுத்தத்தில் நின்றிருந்தேன். பேருந்து என்னை கடந்து மெதுவாக சென்றது. குழந்தை போல என்னை பார்த்து கை காட்டி சிரித்தார். நானும் கையசைத்து சிரித்தேன்.  

(கற்பனை)

Thursday, March 30, 2017

இரவு

அது ஒரு சனிக்கிழமை. இரவு சரியாக 7 மணி இருக்கும். எங்கள் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் சிலர் வந்திருந்தார்கள். பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. 9.30 மணி ஆகிவிட்டது. அவர்கள் மயிலாப்பூர் வரை செல்ல வேண்டும். என் மனைவி அவர்களை cab book செய்து அவர்கள் வீட்டில் சென்று விட்டு வரமுடியுமா என்று கேட்டாள். அந்த இரவு நேரத்தில் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். திரும்பி வரும் பொழுது cab book செய்து வந்துவிடுங்கள் என்று கூறினாள். சரி போய் வருவோம் என்று கிளம்பினேன். திடீரென்று ஒரு யோசனை, திரும்பி வரும்பொழுது பஸ் பிடித்து வரலாம் என்று எண்ணிக்கொண்டே கிளம்பினேன். சென்னையில் இரவு பேருந்து பயணம் செய்து வெகுநாட்கள் ஆகிவிட்டுருந்தது. சென்னையின் இரவு பேருந்து பயணம் எப்பொழுதும் மிக சுவாரசியமாக இருக்கும். மிக உற்சாகமாக கிளம்பினேன். cab சரியாக 9.50 மணிக்கு வந்து சேர்ந்தது. மிகவும் மரியாதையுடன் வணக்கம் கூறினார் ஓட்டுநர். ஒரு நல்ல ஓட்டுநர் மட்டும் அமைந்துவிட்டால் பயணம் மிகவும் உற்சாகமாகிவிடும். நண்பர்களுடன் ஒருமுறை சபரிமலைக்கு ஒரு van வாடகைக்கு எடுத்து சென்று வந்தோம். அருமையான ஓட்டுநர் ஒருவர் வந்திருந்தார். பயணம் செய்த களைப்பே தெரியாத வகையில், மிகவும் நேர்த்தியாக செலுத்தி கொண்டே வந்தார். போகும் வழியில் சிறந்த உணவகங்களாக பார்த்து நிறுத்தினார். அது ஒரு மறக்க முடியாத பயணமாக எங்களுக்கு அமைந்தது. ஆனால், எனக்கு சில பயணங்கள், சில ஓட்டுநர்களால் மோசமான அனுபவங்களாக அமைந்திருக்கின்றன.

Cab டிரைவர் GPS உதவியுடன் வண்டியை ஓட்டிகொண்டே இருந்தார். "அண்ணே, இங்க left எடுத்துக்கோங்க" என்று கூறினேன். "சரி சார், GPSல சொல்றது புரியுது சார்" என்று கூறினார். அதன்பிறகு நான் வழி ஏதும் கூறவில்லை. நந்தனம், மந்தைவெளி வழியாக மயிலாப்பூர் வந்தடைந்தார். அன்று பெருமாள் கோவிலில் சப்பரஉற்சவம். பெருமாள் மாட வீதிகளில் வந்துகொண்டிருந்தார். கொஞ்சம் டிராபிக் இருந்தது. சரியாக 10.10 மணிக்கு அவர்கள் வீடு சென்றடைந்தோம். அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். நடந்து மயிலாப்பூர் tank பஸ் ஸ்டாப் வந்தடைந்தேன். ஒரு சில பணக்காரர்கள் walking போய்க்கொண்டிருந்தார்கள். நான் எந்த பேருந்து வந்தாலும் ஏறிவிடுவது என்று தீர்மானித்திருந்தேன். ஒரு பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே வந்தார்கள். ஒருவர் பாடிக்கொண்டிருந்தார், ஒருவர் மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார், இருவர் ஜால்ரா வாசித்துக்கொண்டிருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. தங்கள் வேலையே மட்டும் செய்துகொண்டிருந்தார்கள். தங்களுக்கு பிடித்த வேலையே ரசித்து செய்வது ஒரு வரம். அது எல்லாருக்கும் அமைவதில்லை. சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்யும் கூட்டம் தான் அதிகம் இங்கே. அதுவும், EMIயில் வீடு அல்லது கார் வாங்கிருந்தால், நாம் ஒரு வகையில் அடிமை தான்.

10 நிமிடம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன். kulfi வண்டி 2-3 என்னை கடந்து சென்றிருந்தது. 4-5 ஆட்டோ ஓட்டுனர்கள் என்னிடம் வலுக்கட்டாயமாக நான் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். "இன்னா சார் நீ, இந்த நேரத்துல பஸ்ஸுக்கு wait பண்றே, வா சார் நீ" என்று உரிமையாக கூப்பிட்டார்கள். நான் சிரித்து கொண்டே, ஆட்டோக்கு காசு இல்லை என்று கூறிவிட்டேன். ஒரு வழியாக 1A பஸ் வந்து சேர்ந்தது. கூட்டம் அவ்வளவாக இல்லை. 10 பேர் இருந்தால் அதிகம். எங்கு இறங்கலாம் என்று யோசித்துக்கொண்டே ஏறினேன். அடையாறு Depot டிக்கெட் வாங்கி கொண்டேன். டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அதுவும் கடையை கழுவி கொண்டிருந்தார்கள். பேருந்தில் வந்தவர்கள் காலையில் வேலைக்கு சென்றவர்களாக இருந்திருக்க வேண்டும். களைப்புடன் இருந்தார்கள். எல்லாரும் FM கேட்டு கொண்டிருந்தார்கள். யாரும், யாரையும் பொருட்படுத்தவில்லை. அடுத்த நாளைக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள ஆயத்தமானார்கள். ஒரு வகையில் போருக்கு சென்று திரும்பி வந்த மனநிலையில் இருந்தார்கள். வெளியே ஒரு போலீஸ்காரர், ஒரு இரண்டு சக்கர ஓட்டுனரை ஊத சொல்லிகொண்டிருந்தார். அவர் ஊதாமல் ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் சில பயணிகள் இறங்கிவிட்டிருந்தார்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். அழகான கடற்கரை காற்று. சில்லென்று காதை உரசிக்கொண்டு சென்றது. பேருந்து அடையாறு Depot வந்தடைந்தது.

நான் சாலையை கடந்து, இந்த பக்கம் வந்தேன். 47 வந்தால் T.நகர் வந்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். மணி அதற்குள் 11 ஆகிவிட்டிருந்தது. பேருந்து வரவில்லை. மக்கள் சாலை ஓரங்களில் குடும்பத்தோடு அமர்ந்திருந்தார்கள். சிரித்து பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குழந்தைகள், ஏதோ ஒரு பழைய விளையாட்டு பொருளை வைத்து சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தது. அம்மா, சாப்பாட்டை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தார். படுப்பதற்காக தரைவிரிப்பை விரித்தார்கள். இன்றைய பொழுதை கழித்துவிட்ட ஒரு நிம்மதி, திருப்தி அவர்களிடம் தெரிந்தது. அந்த குழந்தை என்னை பார்த்து கை காட்டி சிரித்தது. நானும் சிரித்தேன். 

மெதுவாக நடந்து பஸ் ஸ்டாப் வந்தேன். வெகு நேரமாக 47 பேருந்து வரவில்லை. 11.20 ஆகி விட்டது. அடுத்து வரும் வண்டியில் ஏறிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். 23C காலியாக வந்தது. நான் மட்டுமே பேருந்தில் இருந்தேன். சைதாப்பேட்டை டிக்கெட் வாங்கி கொண்டேன். நான், டிரைவர் மற்றும் கண்டக்டர் மட்டுமே இருந்தோம். "சார் 47 பஸ் service இல்லையா" என்றேன். "அய்யே, 11.30 மணிக்கு பஸ் ஏறிட்டு, 47 இல்லையா, 57 இல்லையானு கேக்கற" என்று சிரித்தார். நானும் சிரித்தேன். பேருந்து சைதாப்பேட்டை வந்து சேர்ந்தது. இறங்கி கொண்டேன். அடுத்த T .Nagar பேருந்து வரும் என்ற நம்பிக்கை இல்லை. நடந்து சென்று விடலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். ஒரு ஆட்டோக்காரர் வந்து அருகில் நின்றார். "T. நகர் போகனும்" என்றேன். "60 கொடுங்க சார் போலாம்" என்றார். "40 ரூபாய்னா வாங்க, இல்லை நடந்தே போய்டுறேன்"  என்றேன். சரி வாங்க என்றார். பேசிக்கொண்டே வந்தார். "சார் ஒரு கொசுவத்தி வாங்கிக்கறேன், night எப்படியும் வண்டியில தான் தூங்கணும். வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போக முடியல. இப்படி வண்டி ஓட்டினாதான் பசங்கள நல்ல படிக்க வைக்க முடியுது சார்" என்றார். "சார் நீங்க IT கம்பெனில வேலை பாக்கறீங்களா, நல்ல வேலை சார்" என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்தார். "அண்ணே வண்டியை அப்படியே leftல நிறுத்துங்க, நான் இறங்கிக்கறேன்" என்றேன்.

அவரிடம் 60 ரூபாய் கொடுத்தேன். "Thanks சார்" என்றார். "பசங்கள நல்லா படிக்க சொல்லுங்க" என்றேன். "கண்டிப்பா சொல்றேன் சார்" என்று அடுத்த சவாரிக்கு சென்றுவிட்டார்.

----

Sunday, February 26, 2017

அனுபவம்

சென்னையை அடுத்த ஒரு புறநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமை. வெயில் இல்லாத முன்மதிய நேரம். மக்கள் மெதுவாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். அவசரம் இல்லாத தன்மை எங்கும் நிலவியது. பூ, வாழைப்பழம், ஆப்பிள் வியாபாரம் மட்டும் சற்று பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இளைஞர்கள் நாகரிக உடைகள் அணிந்து, காதில் headphone சொருகி எங்கோ வேகமாக சென்றுகொண்டிருந்தார்கள். நான் பேருந்து வரும்வரை இதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்திருந்த பேருந்து வந்து சேர்ந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இறங்கி சென்றுவிட்டனர். யாரும் வண்டியில் இல்லை. நான் யோசித்துக்கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தேன். 5 நிமிடம் வரை யாரும் வரவில்லை. நான் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கீழே நடைபாதையில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். இடையில் ஒரு துண்டு மட்டுமே கட்டிருந்தார். ஒரு துணிப்பை மட்டும் வைத்திருந்தார். அதற்குள் என்ன இருந்தது என்று சரியாக தெரியவில்லை. அடிக்கடி பைக்குள் கை விட்டு சோதித்துக்கொண்டே இருந்தார். அதற்குள் மக்கள் பேருந்தில் வர ஆரம்பித்துவிட்டார்கள். ஜன்னலோர சீட் எல்லாம் நிரம்பிவிட்டுருந்தது. அந்த வயதானவர் மெதுவாக எழுந்து நின்றார். கால்கள் தடுமாறியது. யாரையோ எதிர்பார்த்திருந்தார். அடிக்கடி எழுந்து பார்த்துக்கொண்டிருந்தார். முகத்தில் ஒரு கடுகடுப்பு நன்றாக தெரிந்தது.

சிறிது நேரம் கழித்து ஒரு வயதான பெண்மணி வந்து, அந்த பெரியவர் அருகில் அமர்ந்தார். அவருடைய மனைவியாக இருக்க வேண்டும். "ஏன் இவ்வளவு நேரம்" என்று பெரியவர் கோவித்துக்கொண்டார். அந்த பெண்மணி ஏதும் சொல்லாமல் ஒரு கவர் கொடுத்து விட்டு எழுந்து சென்று விட்டார். இவர் அந்த
கவர் ஐ மெதுவாக பிரித்தார். நான் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் ஓட்டுநர் பேருந்தை எடுத்துவிட கூடாதே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் கவர் பிரிப்பதை நிறுத்தி விட்டு ஏதோ யோசிக்க ஆரம்பித்து விட்டார். தன்னுடைய துணி பைக்குள் கை விட்டு ஒருமுறை பார்த்து கொண்டார். முகத்தில் ஒரு திருப்தி. திரும்ப கவர் பிரித்து உள்ளிருந்து ஒரு அழகான ஒரு சிறிய பாட்டிலை எடுத்தார். அது ஒரு whiskey பாட்டில். அதை அழகாக தடவி கொடுத்து திறக்க ஆரம்பித்தார். திறக்க முடியவில்லை. கீழே தட்டி பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. பற்களால் கடித்து ஒரு வழியாக திறந்து விட்டார். எதையோ சாதித்து விட்ட ஒரு பெருமிதம். அருகில் இருந்த பிளாஸ்டிக் டம்ளரில்  பாதியை ஊற்றினார். தன்னுடைய துணிப்பையில் கை விட்டு ஒரு வாட்டர் பாக்கெட் மற்றும் ஒரு முறுக்கை எடுத்து வெளியே வைத்தார். தண்ணீரை பிரித்து டம்ளரில் ஊற்றினார். 3-5 சொட்டுகள் எடுத்து தரையில் தெளித்தார். மேல ஒருமுறை பார்த்துக்கொண்டார். கடகடவென ஒரே மடக்கில் குடித்து விட்டார். முகத்தில் பல பாவங்களை காண்பித்தார். அநேகமாக பேருந்தில் இருந்த அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

மெதுவாக எழுந்து தடுமாறி நான் அமர்ந்திருந்த பேருந்தில் ஏறினார். ஓட்டுநர் அமரும் இடத்தில் இருந்து ஆரம்பித்தார். "அய்யா சாப்பிட்டு 2 நாள் ஆச்சு, தர்மம் போடுங்க, பச்சை தண்ணி கூட குடிக்கல" என்று வரிசையாக கேட்க ஆரம்பித்தார். யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அலட்சியமாக பார்த்தார்கள். என்னிடம் நெருங்கும் பொழுது நானும் வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தேன். யாரும் காசு கொடுக்கவில்லை. அவர் பேருந்திலிருந்து இறங்கி, அவர் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்தார். மீதம் இருந்த பாதி பாட்டில் சரக்கை அப்படியே ஒரே மடக்கில் குடித்தார். அவருக்கு எதிர் பக்கம் கை தட்டி அழைத்தார். ஒருவன் வேகமாக ஓடி வந்து ஒரு பிளாஸ்டிக் கவரை இவரிடம் கொடுத்து விட்டு சென்றான். உள்ளே கை விட்டு ஒரு அப்பளத்தை எடுத்தார். எங்கள் பக்கம் திரும்பி  ஜன்னரோலமாக அமர்ந்திருந்த எங்களை பார்த்து அலட்சியமாக சிரித்து அப்பளத்தை கடிக்க ஆரம்பித்தார். பேருந்து நகர ஆரம்பித்தது.

Sunday, January 8, 2017

புதிர்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மிக தாமதமாக கண்விழித்து, ஹால் சோபாவில் சோம்பலுடன் படுத்திருந்தேன். ஏதோ படபடப்பாகவே இருந்தேன். இந்த வீட்டிற்கு குடி வந்ததிலிருந்து இப்படி தான் இருக்கிறது. திடீரென உள்ளே ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். ஒருவேளை பூனையாக இருக்கும் என்று நினைத்தேன். தலைக்கு மேல் மணி அடிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்து விட்டேன். ஒரு வேளை கனவாக இருக்குமோ. ஆசுவாசப்படுத்தி கொண்டு படுத்தால், மீண்டும் மணி அடிக்கும் சத்தம். கண்டிப்பாக இது கனவில்லை. மெதுவாக கதவருகில் சென்று நின்று கொண்டிருந்தேன். கதவிற்கு அருகில் இருக்கும் கண்ணாடியின் திரைசீலையை விலக்கி பார்த்தேன். யாரும் இல்லை. யோசித்து கொண்டே திரும்பினால், மீண்டும் மணி அடிக்கும் சத்தம். இந்தமுறை, வெளியில் அவன் இரண்டு பெரிய பைகளுடன் நின்றிருந்தான். ஒரு நிமிடம் யோசித்து விட்டு கதவை திறந்தேன்.  

"என்னடா எப்படி இருக்கே, நான்தான்டா" என்று அறிமுகப்படுத்திகொண்டான். என்னுடைய பழைய நண்பன் தான். ஆனால் அவ்வளவு நெருக்கம் எல்லாம் இல்லை. பார்த்து பல வருடங்கள் வேறு ஆகிருந்தது. இன்று தான் இங்கு வந்து இறங்கிருக்கிறான் என்று யூகித்து கொண்டேன். கடைசியாக பல வருடங்கள் முன்பு அவனை கடுமையாக அவமான படுத்தியது மட்டுமே மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

"சொல்லுடா எப்படி இருக்கே, என்ன திடீர்னு" என்று கேட்டேன். 

"ஏன் உள்ளே கூப்பிட மாட்டியா" என்று பைகளை எடுத்து கொண்டு உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான். " என்னடா சந்தோஷமா  இருக்கே போல" என்று வீட்டை ஒரு நோட்டம் விட்டான். "எங்க குடும்பத்த அவமான படுத்திட்டு நீ போயிட்ட. நாங்க ரொம்ப உடைஞ்சி போய்ட்டோம். நேரம் வரும்போது பாத்துக்கலாம்னு விட்டுட்டோம்" என்று சிரித்து கொண்டே சொன்னான். நானும் அசௌகரியமாக சிரித்தேன்.

"உன் வீட்ல தான் தங்கலாம்னு இருக்கேன்டா. நிறைய வேலை இருக்கு இங்க" என்று சொன்னான்.

"இல்லடா அது வந்து" என்று இழுத்தேன். "யாருடா இது" என்று என் காதருகே வந்து கேட்டான்

"எங்கடா" என்று சுத்திமுத்தி பார்த்தேன். "என்ன விளையாடறியா, கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு நிக்குது, யாருனு கேக்கற" என்றான். "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு கூட யாரும் ஊருல பேசிக்கலையே" என்று சிரித்தான். 

நானும் சிரித்தேன். "நீங்க எல்லாம் கொடுத்து வெச்சவங்கடா. இங்க வரவங்க எல்லாம் அந்த பொண்ண பாத்துட்டு யாருனு கேக்கறாங்க, ஆனா நான் இன்னும் பாக்கவே இல்லை" என்றேன்.

குழப்பமாக என்னையே பார்த்தான். "ஆமாம், என்  வீட்டுக்கு வரவங்க சில பேரு கண்ணுக்கு மட்டும் அந்த பொண்ணு தெரியுது, ஆனா என் கண்ணுக்கு மட்டும் தெரியமாட்டேங்குது. வீட்டுக்கு வந்த புதுசுல எனக்கும் கூட கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு, அப்போஅப்போ சத்தம் வரும், மல்லிகை பூ வாசனை வரும், போகப்போக எனக்கும் சரினு அப்படியே பழகிடுச்சு" என்று டீபாய் மேல இருந்த மல்லிகை பூவை எடுத்து ஓரமாக வைத்தேன்.

நான் அமைதியாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் வெகுநேரமாக அமைதியாக அமர்ந்திருந்தான். கொஞ்சம் வேர்த்திருந்தான். "சரிடா, எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இங்க தான் இருக்கான், அவனை பார்த்துட்டு வரேன்" என்று இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான். 

"சரிடா" என்று அவன் போனபிறகு கதவை மூடிவிட்டு உள்ளே வந்தேன். 

"யாரு அவன்" என்று அவள் கோவமாக கேட்டாள்.

"என்னோட பழைய நண்பன் தான். பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. கதவு கண்ணாடி வழியா பார்த்தவுடனே என்ன பண்றதுனு தெரியல. அவன் வேற ரெண்டு பேக் கொண்டு வந்திருந்தான். எப்படியும் இங்க தங்கறமாதிரி பிளான் போட்டு வந்திருப்பான். நம்ம ஒண்ணா இருக்கறது தெரிஞ்சா, வீட்ல சொல்லி பெரிய பிரச்சனை ஆயிடும்" என்று சொன்னேன். "நல்ல வேலை, நீ இந்த ஐடியா சொன்னே. அவனுக்கு தெரியாம இந்த பூவை எடுத்து வைக்கறதுக்குள்ள, எப்பா" என்று சிரித்தேன். பயந்து போய்ட்டான் என்று இருவரும் சிரித்தோம்.

"ஆனா உன் friend பெரிய முட்டாளா இருப்பான் போல, சொன்னதை அப்படியே நம்பி போய்ட்டான்" என்று சிரித்தாள். இருவரும் வெகு நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம். மீண்டும் மணி அடிக்கும் சத்தம். பொதுவாக இந்த வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். யோசித்துக்கொண்டே கதவை திறந்தேன். அவன் தான் நின்றிருந்தான். "என்னடா" என்றேன்.

சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான். வாசல் கதவு திறந்தே இருந்தது. சோபாவில் உட்கார்ந்தான். "அவளை டீ கொண்டு வரச்சொல்லு" என்றான். "நான் எப்படிடா சொல்லுவேன், நான் தான் அவளை பார்த்ததே இல்லைனு சொன்னேன்ல" என்றேன்.

கடகடவென சிரித்தான். "உன் போன் நம்பர் வாங்கி, உன் அட்ரஸ் கண்டுபிடிக்கும் போதே, எனக்கு தெரியும்டா எல்லாம். சரி, நீ என்னதான் பண்றேனு பாக்கலாம்னு நெனச்சேன். ஆனா பேய் ட்ராமா எல்லாம் ரொம்ப ஓவர்" என்று சிரித்தான். எங்கள் இருவரையும் பார்த்து கண்அடித்தான்.

"நான் குளிச்சிட்டு வரேன்" என்று உள்ளே சென்றான். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. டீபாயின் மீது இருந்த எனது மொபைல் போன் சத்தம் செய்தது. வாட்ஸாப்ப் நோட்டிபிகேஷன். அது எங்கள் ஊர் நண்பர்கள் குரூப்.
ஓபன் செய்து பார்த்தேன்.  "இன்று அவனுக்கு பத்தாம் ஆண்டு நினைவு நாள்" என்று அவன் போட்டோவுடன் வந்திருந்தது. கால்கள் நடுங்க, உதடுகள் வெடித்து, நெஞ்சில் ஏதோ அடைப்பது போல இருந்தது. திரும்பி பார்த்தேன்.

வாசல் கதவு, ஜன்னல்கள் தானாக மூடிக்கொண்டது. டிவியில் 'என் கதை முடியும் நேரமிது' என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.